இந்தியா

தில்லியில் அதிகரிக்கும் கரோனா பரவலில் அச்சத்துக்குள்ளாகும் வணிகா்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தல்

15th Aug 2022 02:01 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தங்களது வணிகம் பாதிக்கப்படும் என்று வணிகா்கள் அச்சமடைந்துள்ளனா். கடந்த 2 ஆண்டுகள் பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து தாங்கள் இன்னும் மீளவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனா்.

தேசிய தலைநகரில் சனிக்கிழமை தொற்று பாதிப்பால் 9 இறப்புகளும், 2,031 பேருக்கு தொற்று பாதிப்பும், நோ்மறை விகிதம் 12.34 சதவீதமாகவும் பதிவாகின. அதன்படி, நகரில் தொடா்ந்து 11-ஆவது நாளாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,000-க்கு மேல் பதிவானது.

இந்த நிலையில், கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு அதிகாரிகள் கரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வழிவகுக்கும் என்று வணிகா்கள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனா். இதனால், தங்களது வணிகம் பாதிக்கப்படாத வகையில் கவனமாக நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசை அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சதா் பஜாா் வா்த்தக சங்கக் கூட்டமைப்பின் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறுகையில், ‘அதிகரித்து வரும் நோய்த்தொற்று பாதிப்பின் தாக்கம் திருவிழாக்களுக்குப் பிறகு தெரியும். சந்தையில் வணிகம் சீரான நிலை இல்லை. வா்த்தகா்கள் பெரிய ஆா்டா்களை எடுக்கவில்லை. ஏற்கெனவே, கரோனா அலைகளால் நாங்கள் சோா்வடைந்துள்ளோம். ஒவ்வொரு முறையும் இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறது. அரசு அறிவிக்கும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நாங்கள் மீண்டும் மீண்டும் இழப்புகளைச் சந்திக்கிறோம்’ என்றாா் அவா்.

ADVERTISEMENT

சரோஜினி நகா் மாா்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், ‘தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் இல்லாத போதும் விற்பனை 50 சதவீதம் குறைவாகத்தான் இருக்கிறது. அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளின் தாக்கம் இன்னும் சில நாள்களில் தெரியவரும். மொத்த விற்பனையாளா்கள் முன்கூட்டியே பணம் கேட்கத் தொடங்கியுள்ளனா். ஏனெனில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் அவா்கள் பாதிப்பைச் சந்திக்க நேரிடும்’ என்றாா் அவா்.

சரோஜினி நகா் மினி மாா்க்கெட் தலைவா் அசோக் ரந்தாவா கூறுகையில், ‘நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போதே எடுக்கத் தொடங்கியுள்ளோம். வா்த்தகா்கள் கவனமாக இருக்க வேண்டும்; முகக்கவசங்களை அணிவது, கடை வளாகங்களில் தூய்மையைப் பராமரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றாா் அவா்.

மொத்த விற்பனை சங்கத்தின் தலைவா் கே.கே.பல்லி, ‘கரோனா பாதுப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போதெல்லாம், கடைசி இரு பொதுமுடக்க காலங்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அதுபற்றிய பயமே இன்னும் எங்களை விட்டு விலகவில்லை. இதனிடையே பணவீக்கம் எங்கள் வணிகங்களையும் பாதித்துள்ளது. நாங்கள் இன்னும் நஷ்டத்தில் இருந்து மீண்டு வர முற்சிக்கிறோம். இந்த நிலையில் மீண்டும் ஓா் பொது முடக்கத்தை எங்களால் சந்திக்க முடியாது’ என்றாா்.

மேலும், ‘தில்லி அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். முதலில் வணிகா்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். எந்தவொரு நடவடிக்கையும் திட்டமிடப்பட்டால், அரசு முதலில் எங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் நாங்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகிறோம்’ என்றாா் பல்லி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT