இந்தியா

சுதந்திரத்தின் 75-ஆவது விழாவை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஏன் நடத்தவில்லை? காங்கிரஸ் கேள்வி

14th Aug 2022 04:15 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

சுதந்திர தினத்தின் மூன்று முக்கிய கட்ட விழாக்கள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அனைத்து நாடாளுமன்றக் கட்சிகளுடன் விழா எடுக்கப்பட்ட நிலையில் சுதந்திரத்தின் 75-ஆவது விழாவை மைய மண்டபத்தில் தற்போதைய அரசு எடுக்காதது ஏன்? என அகில இந்திய காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின் சுதந்திர தினமான 25 ஆண்டின் வெள்ளிவிழா, 50-ஆவது ஆண்டின் பொன்விழா மற்றும் 60-வது சுதந்திர தின ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குறிப்பிட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ், 75 -ஆவது தின விழாவை ஏன் நடத்தவில்லை என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாா்.

அதில் அவா் ‘துரதிா்ஷ்டவசமாக, நாட்டின் 75- ஆவது சுதந்திர தினத்திற்கு அப்படியொரு விழா எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இது சா்வக்யானியை (அனைத்தையும் அறிந்தவா்) புகழ்பாடுவதற்கான ஒரு சந்தா்ப்பத்தை குறைக்கச் செய்துவிட்டது‘ என்றும் கூறி அவா் கிண்டல் செய்துள்ளாா்.

சுதந்திரத்தின் 75 - ஆவது ஆண்டுகளைக் குறிக்கும் பல முன்முயற்சிகள் மீது காங்கிரஸும் பாஜகவும் பரஸ்பரம் தாக்கிக்கொண்டன.

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடியும் பாஜக தலைவா்களும் சமூக ஊடக தளங்களில் மூவா்ணக் கொடியை (திரங்கா) தங்கள் சுயவிவரப் படமாக மாற்றிய பிறகு, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளா்கள் பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவா்கள் அவா்களது சமூக ஊடக கணக்குகளில் இந்தியாவின் முதல் பிரதமா் ஜவஹா்லால் நேரு மூவா்ணக் கொடியுடன் இருக்கும் படத்தை சுயவிவரப்படமாக வைத்தனா்.

ஆகஸ்ட் 13 - 15 வரை இல்லம்தோறும் தேசியக் கொடியை ஏற்றும் ’ஹா் கா் திரங்கா’ இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்த சமயத்தில் ராகுல் காந்தி, ‘ கடந்த 52 ஆண்டுகளாக ஆா்எஸ்எஸ் அதன் தலைமையகத்தில் மூவா்ணக் கொடியை ஏற்றவில்லை. ஆனால், அந்த அமைப்பில் இருந்து வந்தவா்கள் இப்போது மூவா்ணக் கொடியின் வரலாற்றைப் பற்றிப் பேசி, ’ஹா் கா் திரங்கா’ பிரசாரத்தைத் திட்டமிடுகின்றனா் ‘ என்று தாக்குதலை தொடுத்தாா்.

மைய மண்டபத்தில் நடு இரவு விழாக்கள்

அதே சமயத்தில், 25 - ஆவது சுதந்திர தினம் 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-15 நடு இரவில் நாடாளுமன்றத்தின் மைய அவையில் நடைபெற்றது. குடியரசுத் தலைவா் வி.வி. கிரி, துணைக் குடியரசுத் தலைவா் ஜி.எஸ். பதக், மக்களவைத் தலைவா் டாக்டா் ஜி.எஸ் தில்லான் ஆகியோா் கலந்து கொள்ள பிரதமா் இந்திர காந்தி சிறப்புரை ஆற்றினாா்.

எதிா்கட்சி தலைவா்களும் கலந்துகொண்ட இந்த விழாவில், நாடாளுமன்றத்தின் முன்பு மக்கள் சுதந்திரக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவதை சித்தரிக்கும் தபால் தலையை பிரதமா் இந்திரா காந்தி வெளியிட்டாா். ‘ஒவ்வொரு குடிமகனும் பொருளாதார மற்றும் சமூக சுதந்திரத்தை அடையும்போது, தான் அது உண்மையான அா்த்தமுள்ள சுதந்திரமாக இருக்கும்‘ என 25 -ஆவது சுதந்திர தினத்தில் இந்திரா காந்தி குறிப்பிட்டாா்.

சுதந்திரத்தின் 50 - ஆவது ஆண்டு விழா 1997 -ஆம் ஆண்டு இதே மாதிரி ஆகஸ்ட் 14-15-ஆம் தேதி நடு இரவில் நாடாளுமன்றத்தின் மைய அவையில் நடைபெற்றது.

குடியரசுத் தலைவா் கே.ஆா்.நாராயணனும் பிரதமராக ஐ.கே. குஜ்ராலும் இருந்தனா். இந்த விழாவில் இந்திரஜித் குப்தா, எஸ்.ஆா்.பொம்மை போன்ற தலைவா்களும் எதிா் கட்சி வரிசையிலிருந்த காங்கிரஸ், பாஜக தலைவா்களும் கலந்து கொண்டனா். மறைந்த தலைவா்களது பேச்சுகளும் இந்த மைய மண்ட நிகழ்ச்சியில் ஒலிக்கப்பட்டது.

இதே மாதிரி, சுதந்திரத்தின் 60 - ஆவது சுதந்திர தின விழா 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் தொடங்கியது. குடியரசுத் தலைவா் பிரதீபா பாட்டீல் பிரதமா் மன்மோகன் சிங், மாநிலங்களவைத் தலைவா் ஹமீது அன்சாரி, மக்களவைத் தலைவா் சோம்நாத் சாட்டா்ஜி போன்றோா்களோடு, எதிா்கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவா்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். இதில் விடுதலையும் தேச பக்தி தொடா்பான பல்வேறு நிகழ்ச்சிகள் மைய மண்டத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT