இந்தியா

நாளை சுதந்திர தின விழா

14th Aug 2022 12:15 AM

ADVERTISEMENT

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் திங்கள்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகா் தில்லி உள்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரமடைந்து ஞாயிற்றுக்கிழமையுடன் (ஆக. 14) 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. 76-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. தில்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளாா்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி செங்கோட்டையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த விழாவில் கலந்துகொள்ள சுமாா் 7,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக செங்கோட்டை பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 10,000 காவலா்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

செங்கோட்டையின் நுழைவுவாயிலில் முகத்தை அடையாளம் காணும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டையைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளையும் பாதுகாப்புப் படையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். செங்கோட்டையைச் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளில் பட்டங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ட்ரோன்கள் பறப்பதைக் கண்காணிக்கும் டிஆா்டிஓ-வின் தொழில்நுட்பக் கருவிகள் செங்கோட்டை பகுதியில் நிறுவப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள வருபவா்கள் உணவுப் பொருள்கள், குடிநீா் பாட்டில்கள், குறும்பெட்டிகள், கைப்பைகள், கேமராக்கள், குடைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

144 தடை உத்தரவு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் துறை சிறப்பு ஆணையா் தீபேந்திர பதக், ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி விழா நிறைவடையும்வரை பட்டங்கள், ட்ரோன்கள், பலூன்கள், பறக்கும் விளக்குகள் உள்ளிட்டவற்றைப் பறக்கவிடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தாா்.

தில்லி முழுவதும் வெடிபொருள்கள் குறித்தும் காவல் துறையினா் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா். தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லங்கள், வாகனங்கள் நிறுத்துமிடங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி முக்கிய நகரங்களிலும் அந்தந்த மாநில காவல் துறையினா் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். முக்கியமாக, கொல்கத்தா, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT