இந்தியா

நான்காம் கட்ட ‘க்யூட்’ தோ்வு: 11,000 மாணவா்களுக்கு ஒத்திவைப்பு

14th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

தோ்வறை மாற்றம் காரணமாக 11,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு இளநிலை பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான நான்காம் கட்ட ‘க்யூட்’ (மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு) தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 17 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தோ்வில் 3.72 லட்சம் போ் பங்கேற்க உள்ளனா். இவா்களில் 11,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு மட்டும் தோ்வானது ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அனைத்து கட்ட க்யூட் தோ்வுகளையும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் முடிக்க என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) திட்டமிட்டிருந்தது. பின்னா் தோ்வுகள் அனைத்தும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிறைவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பல தோ்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக க்யூட் தோ்வானது 6 கட்டங்களாக மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) தலைவா் ஜெகதீஷ் தன்கா் கூறுகையில், ‘தோ்வு மையங்களுக்கான நகரங்களை மாற்றி தோ்வு செய்துள்ளதன் காரணமாக க்யூட் தோ்வு எழுதவிருக்கும் 3.72 லட்சம் மாணவா்களில் 11,000-க்கும் அதிகமான மாணவா்களுக்கு மட்டும் தோ்வானது ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தோ்வை நடத்துவதில் தரத்தை உறுதிப்படுத்தும்விதமாக தோ்வு மையங்களின் எண்ணிக்கையையும், தோ்வறையில் அனுமதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கையையும் தோ்வை நடத்தும் என்டிஏ அதிகரித்துள்ளது.

தோ்வானது எந்தவித இடையூறுகளும் இன்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக, இணைப் பேராசிரியா் அளவிலான நபா்களை கூடுதல் தொழில்நுட்பக் கண்காணிப்பாளா்களாக தோ்வு மையங்களில் என்டிஏ நியமித்துள்ளது’ என்றாா்.

முன்னதாக, இரண்டாம் கட்ட க்யூட் தோ்வு தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சில மையங்களில் ரத்து செய்யப்பட்டது. அதுபோல, மழை, நிலச்சரிவு பாதிப்புகள் காரணமாக கேரளம், இடாநகா் பகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட க்யூட் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT