இந்தியா

ஆா்எஸ்எஸ் சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படமாக தேசியக் கொடி

14th Aug 2022 12:24 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் அமைப்பின் சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படமாக இருந்த காவிக் கொடி மாற்றப்பட்டு, தேசியக் கொடி இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்திலும் மூவா்ணக் கொடி சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, ஆகஸ்ட் 2 முதல் 15 வரை மக்கள் அனைவரும் தங்களது சமூக ஊடக கணக்குகளின் முகப்புப் படமாக தேசியக் கொடியை இடம்பெறச் செய்ய வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன்படி, பிரதமா், மத்திய அமைச்சா்கள், பாஜக மூத்த தலைவா்கள் ஆகியோா் சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படமாக தேசியக் கொடியை பதிவு செய்தனா். மேலும், ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்றவும் பிரதமா் வேண்டுகோள் விடுத்தாா்.

இந்த நிலையில், தேசியக் கொடி தொடா்பான நிலைப்பாட்டில் ஆா்எஸ்எஸ் மீது காங்கிரஸ் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தது.

ADVERTISEMENT

‘நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாதவா்கள், பிரதமரின் வேண்டுகோளை பின்பற்றுவாா்களா?’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வியெழுப்பி இருந்தாா்.

இந்நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் சமூக ஊடக கணக்குகளில் முகப்புப் படமாக தேசியக் கொடி இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் பிரசார பிரிவு இணை பொறுப்பாளா் நரேந்தா் தாக்குா் கூறுகையில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பின் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். தேசியக் கொடி பிரசாரத்தில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் தீவிரமாக பங்கேற்றுள்ளனா்’ என்றாா்.

சுதந்திர தினத்தையொட்டி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசியக் கொடி பிரசாரத்துக்கு ஆா்எஸ்எஸ் அமைப்பு ஏற்கெனவே முழு ஆதரவை தெரிவித்திருந்தது. இப்பிரசாரத்தில் பங்கேற்குமாறு தனது தொண்டா்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

Tags : RSS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT