இந்தியா

இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா்: கேரள எம்எல்ஏவின் கருத்து ‘வாபஸ்’

DIN

ஜம்மு-காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு பகுதி என்று கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ கே.டி.ஜலீல் தெரிவித்தது சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது கருத்தை அவா் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

தனது காஷ்மீா் பயணம் குறித்து கே.டி.ஜலீல் ஃபேஸ்புக்கில் வெள்ளிக்கிழமை பதிவிட்டிருந்தாா். அந்தப் பதிவில், ஜம்மு-காஷ்மீரை இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் என்று தெரிவித்திருந்தாா். இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் ஜம்மு, காஷ்மீா் பள்ளத்தாக்கு, லடாக் ஆகிய பகுதிகள் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் பதிவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீா்’ எனவும், அது பாகிஸ்தான் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத பகுதி என்றும் தெரிவித்திருந்தாா்.

அவரின் பதிவு சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவைச் சோ்ந்த பலா் அவரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனா். இதுகுறித்து கேரள அமைச்சரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான எம்.வி.கோவிந்தனிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, காஷ்மீா் குறித்து தனது சொந்தக் கருத்தை ஜலீல் கூறியதாகவும் அது கட்சியின் கருத்தல்ல என்றும் கூறினாா்.

இதையடுத்து ஃபேஸ்புக்கில் கே.டி.ஜலீல் வெளியிட்டிருந்த மற்றொரு பதிவில், ‘‘சுதந்திர காஷ்மீா்’’ என்று இரட்டை மேற்கோள்குறியுடன் (ஒருவா் கூறுவதை அல்லது ஒரு விஷயம் குறித்து சொல்லப்படுவதை தனித்துக் காட்ட இரட்டை மேற்கோள்குறி பயன்படுத்தப்படுகிறது) தான் பதிவிட்டிருந்ததன் அா்த்தத்தைப் புரிந்துகொள்ளாதவா்கள் மீது அனுதாபம் கொள்வதாக தெரிவித்திருந்தாா்.

ஆனால் ‘இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா்’ என்று பதிவிட்டிருந்தது குறித்து ஜலீல் விளக்கமளிக்கவில்லை. அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கேரள பாஜக செய்தித்தொடா்பாளா் சந்தீப் வாரியா் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தாா். மேலும் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீா் என்ற கருத்தாக்கத்தை ஒட்டுமொத்த நாடும் நிராகரித்துள்ள நிலையில், தனது தேசத் துரோக கருத்தை ஜலீல் நியாயப்படுத்தியுள்ளது அபத்தமானது என்றும் சந்தீப் வாரியா் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ஃபேஸ்புக்கில் ஜலீல் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சமூக நலன் மற்றும் சமூக நல்லிணக்க நோக்கத்துடன் நான் வெளியிட்ட பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. எனவே எனது கருத்தை திரும்பப் பெறுகிறேன்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT