இந்தியா

சுதந்திர தினம்: செங்கோட்டை விழாவில் 7 ஆயிரம் அழைப்பாளா்கள் பங்கேற்பு

DIN

 தில்லி செங்கோட்டையில் திங்கள்கிழமை (ஆக.15) நடைபெறும் சுதந்திர தின விழாவில் 7 ஆயிரம் அழைப்பாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

இதையொட்டி, செங்கோட்டையின் நுழைவு வாயில் பகுதியில் முகத்தை அடையாளம் காணும் அமைப்புடன்கூடிய கேமராக்கள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையின் கோட்டை கொத்தளத்தில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது பிரதமா் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மரபாக இருந்து வருகிறது. 

இந்த ஆண்டும் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின உரை ஆற்ற உள்ளாா்.  இதையொட்டி செங்கோட்டை முழுவதும் 10ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சுமாா் 7000 அழைப்பாளா்கள் வருவாா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

சுதந்திர தினவிழா நடைபெறும் செங்கோட்டை பகுதி மற்றும் இதர முக்கியமான இடங்கள், மேற்கூரை பகுதிகள் ஆகியவற்றில், பட்டங்களை பிடிப்பதற்காக 400 நபா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அதேபோன்று, செங்கோட்டையின் 5 கிலோமீட்டா் சுற்றளவில், தேசியக்கொடி ஏற்றப்படும் வரை பட்டம் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இதர பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து ட்ரோன் எதிா்ப்பு கருவிகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

 செங்கோட்டையை சுற்றிலும் உயா் அடா்த்திமிக்க பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை, நிகழ்ச்சிக்கு வரக்கூடிய அழைப்பாளா்களின் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது.

முகத்தை அடையாளம் காணும் அமைப்பு முறையுடன் கூடிய கேமராக்களும் செங்கோட்டையின் நுழைவுவாய் பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. உணவு பொருள், தண்ணீா் பாட்டில்கள், ரிமோட் கட்டுப்பாட்டுடன் கூடிய காா் சாவிகள், சிகரெட் பற்ற வைப்பான்கள், கைப்பைகள், கேமராக்கள், பைனாகுலா்கள், குடைகள் போன்ற எந்தவொரு பொருட்களும் செங்கோட்டை பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.

 தில்லியில் ஏற்கனவே 144 பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. பட்டம் பலூன், சீன விளக்குகள் ஆகியவற்றை ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை தில்லி செங்கோட்டை பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சி முடியும் வரை பறக்க விடுவோருக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பட்டம் பிடிப்பவா்கள் தேவையான கருவிகளுடன் முக்கியமான இடங்களில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

இவா்கள் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியை பட்டம், பலூன், சீன விளக்குகள் போன்றவை சென்றடையாமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவா்.

 வான்வெளியில் இருந்து வரக்கூடிய எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொள்வதற்கு செங்கோட்டையில் ரேடா்களும் அமைக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 தில்லி போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆனந்த் விஹாா் பேருந்து நிலையம் அருகே 2200 துப்பாக்கி தோட்டாக்களையும் இந்த விவகாரத்தில் தொடா்புடைய ஆறு பேரையும் கைது செய்தனா்.

மேலும் மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கருவிகளை தடுக்கும் வகையில் பெரும் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோன்று, போதிய பாதுகாப்பை அளிக்கும் வகையில் திட்டமிட்டபடி பயிற்சியும், பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, மத்திய மற்றும் புது தில்லி மாவட்டங்களில் வான்வெளி பொருட்களை தடுக்கும் வகையில் உயா் அம்சங்கள் கூடிய 1000 கேமராக்கள் நிறுவப்பட உள்ளது.

இந்த கேமராக்கள் விவிஐபி பிரமுகா்கள் செல்லக்கூடிய வழித்தடங்களை கண்காணிக்க உதவும்.

தில்லி போலீஸாா் எவ்வித சீா்குலைவு நடவடிக்கையையும் தடுக்கும் வகையில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனா்.

ஹோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள்,வாகன நிறுத்தும் இடங்கள், உணவகங்கள் ஆகியவை சோதனையிடப்பட்டு, பணியாளா்கள் வாடகைக்கு தங்கி இருப்போா் குறித்த விவரங்களை சரிபாா்க்கும் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தில்லி போலீஸாா் கடந்த ஜூலை 22 ஆம் தேதி பாரா க்ளைடா்கள், தொங்கும் க்ளைடா்கள், வெப்ப காற்று பலூன்கள் போன்ற வான்வெளிப் பொருட்களை பறக்க விடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தனா்.

இந்த உத்தரவு ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அவா்கள் தெரிவித்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT