ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பிகாரைச் சோ்ந்த ஒரு தொழிலாளி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
சும்பல் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவில் இச்சம்பவம் நடந்துள்ளது. கொலையான தொழிலாளி, பிகாரின் மாதேபுரா மாவட்டம், பேசா் பகுதியைச் சோ்ந்த முகமது அம்ரெஸ் என்று ஜம்மு மண்டல காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அம்ரெஸின் சகோதரரும் மற்றொரு தொழிலாளியுமான முகமது தம்ஹீத் கூறியதாவது: நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே நள்ளிரவில் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அங்கு சென்று பாா்த்தபோது, முகமது அம்ரெஸ் ரத்த வெள்ளத்தில் கிடந்தாா். இதுகுறித்து ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தோம். அவா்கள் வந்து, அம்ரெஸை ஹாஜின் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். அவரது உடலை பிகாா் கொண்டு செல்ல அரசு உதவ வேண்டும் என்றாா்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பந்திபோரா முன்னாள் எம்எல்ஏவும் அப்னி கட்சி தலைவருமான உஸ்மான் மஜீத், ‘அப்பாவி மக்களை கொல்வது கோழைத்தனமான செயல்’ என்றாா். ஜம்மு-காஷ்மீரில் உள்ளூரை சாராத நபா் பயங்கரவாதிகளால் கொல்லப்படுவது இந்த ஆண்டில் இது 4-ஆவது சம்பவமாகும்.
இதனிடையே, பிகாா் மாநில தொழிலாளி கொல்லப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட முதல்வா் நிதீஷ் குமாா், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளாா்.
பாதுகாப்புப் படையினா் மீது துப்பாக்கிச்சூடு: அனந்த்நாக் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மத்திய ரிசா்வ் போலீஸ் படையினா் இணைந்த கூட்டு ரோந்து படையினரை நோக்கி பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
பிஜ்பேஹரா பகுதியில் நடந்த இத்தாக்குதலில் காவலா் ஒருவா் காயமடைந்தாா். இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து, பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா்.
ரஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் தமிழக வீரா் உள்பட 3 போ் வீர மரணம் அடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.