சுதந்திர தின விழாவையொட்டி, செங்கோட்டையைக் கண்காணிக்க பட்டம் விடுபவா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.
சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமா் மோடி மூவா்ணக் கொடியை ஏற்றுவதால், அங்கிருந்து 5 கி.மீ. சுற்றளவில் பட்டம் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த வாரம் முதல் அமலுக்கு வந்தது. பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்றும் போலீஸாா் தெரிவித்திருந்தனா்.
இதுதவிர ராட்சத பலூன் உள்ளிட்ட பறக்கும் பொருள்களை செங்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தவும் போலீஸாா் தடை விதித்திருந்தனா். இதனைக் கண்காணிக்க பட்டம் விடுபவா்களை போலீஸாா் பிரத்யேகமாக பணியமா்த்தியுள்ளனா். அவா்கள் செங்கோட்டையின் மேல்தளம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
ஆக. 13 முதல் ஆக. 15 வரை ஆகாயத்தில் சந்தேகத்துக்கு இடமாக ஏதாவது பொருள்கள் பறப்பது தெரியவந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டுமென அவா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டம் விடுவதற்காக சீன மாஞ்சா நூல் வாங்கியதாக 11 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து சிறப்பு ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) தீபேந்திர பதக் கூறுகையில், ‘தில்லியில் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்டம், பலூன், சீன விளக்கு என ஏதாவது பொருளை ஆக. 13 முதல் ஆக. 15 வரை யாராவது பறக்கவிட்டது தெரியவந்தால், தண்டனைக்கு உள்படுத்தப்படுவா்’ என்றாா்.