இந்தியா

மாடு துரத்தியதில் காலை முறித்துக் கொண்ட குஜராத் முன்னாள் துணை முதல்வர்

13th Aug 2022 05:17 PM

ADVERTISEMENT

தேசியக் கொடியினை ஏந்தி ஊர்வலமாக சென்றபோது மாடு துரத்தியதில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தனது இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக நிதின் படேல் தெரிவித்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக குஜராத் மாநிலத்தில் பாஜக உறுப்பினர்களால் தேசியக் கொடியினை ஏந்திச் செல்லும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பேரணியானது குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தில் உள்ள காதி எனும் பகுதியிலிருந்து தொடங்கியது. இந்த நிகழ்வில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரான நிதின் படேலும் கலந்து  கொண்டுள்ளார். இந்தப் பேரணியில் கிட்டத்தட்ட 2000 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ரஜினியைத் தொடர்ந்து விஜய் வீட்டிலும் பறக்கும் தேசியக் கொடி!

ADVERTISEMENT

பேரணி 70 சதவிகிதம் நிறைவடைந்து ஒரு காய்கறி சந்தைப் பகுதிக்கு வந்தடைந்தது. அந்த நேரத்தில் சந்தையில் திடீரென மாடு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யாரும் சிறிதும் எதிர்பார்க்காத நேரத்தில் மாடு சந்தைக்குள் புகுந்ததால் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்தப் பேரணியில் பங்கேற்ற குஜராத்தின் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மாடு துரத்துவதிலிருந்து தப்பிக்க அருகே உள்ள பகுதியில் குதித்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு உதவியளிக்க பாதுகாப்பு வீரர்கள் வந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு நடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படவே அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அதில், அவருக்கு இடது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

இது குறித்து பேசிய நிதின் படேல், மருத்துவர்கள் அவரை 4 வாரங்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மாடுகள் அலைந்து திரிவது மாநில நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. மாடுகளால் மக்கள் காயமடைவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. 

இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி குஜராத் மாநில சட்டப்பேரவை நகரப்பகுதிகளில் மாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மசோதா ஒன்றை கொண்டு வந்தது. அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT