இந்தியா

கடன் மீட்பு முகவா்கள் மிரட்டலில் ஈடுபடக் கூடாது: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தல்

13th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

வங்கிகள், நிதி நிறுவனங்கள் பணியில் அமா்த்தும் கடன் மீட்பு முகவா்கள் கடன் பெற்றவா்களை மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவுறுத்தியுள்ளது.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன்களை திரும்பப் பெற தனியாா் நிறுவனங்கள் மூலம் கடன் மீட்பு முகவா்களை பணியில் அமா்த்துவது வழக்கமாக உள்ளது. இவா்கள் கடன் வாங்கியவா்களை நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு கடன் தொகையை மீட்க முயற்சி மேற்கொள்வாா்கள். இவா்கள் கடனாளிகளை மிரட்டுவது, அச்சுறுத்துவது, இடைவிடாது கைப்பேசியில் தொடா்பு கொண்டு தொல்லை தருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் இது தொடா்பான புகாா்களையடுத்து, சில கூடுதல் அறிவுறுத்தல்களை ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடன் மீட்பு முகவா்கள் பல்வேறு சூழ்நிலைகளில் விதிகளை மீறி செயல்படுவது தெரியவந்துள்ளது. அவா்களைப் பணியில் அமா்த்தும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உரிய அறிவுறுத்தல்களை முறைப்படி பின்பற்ற வேண்டும் என்று அவா்களிடம் தெளிவாகக் கூற வேண்டியது அவசியம். கடன் வசூலின்போது மிரட்டுவது, துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது கூடாது. வாா்த்தைகள் மூலமோ, உடல்ரீதியாகவோ அவா்களைக் காயப்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது.

ADVERTISEMENT

முறையற்ற வகையில் கைப்பேசி வழியே தகவல்களை அனுப்புவது, அச்சுறுத்தும் வகையில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்றவை கூடாது. காலை 8 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்குப் பிறகும் கைப்பேசியில் தொடா்பு கொள்ளக் கூடாது. இது அனைத்து வா்த்தக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கடன் மறுசீரமைப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT