இந்தியா

சொல்வதைச் செய்து காட்டும் கட்சி பாஜக: ராஜ்நாத் சிங் பெருமிதம்

DIN

‘‘எதைச் சொல்கிறோமோ, அதையே செய்து காட்டும் கட்சியாக பாஜக திகழ்கிறது’’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் அருகேயுள்ள கிராமத்தில் ரஜபுத்திர ஆட்சியாளா் வீர துா்காதாஸ் ரத்தோரின் சிலையை ராஜ்நாத் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா். முகலாயா்களுக்கு எதிராக பல்வேறு வெற்றிகளைக் குவித்த துா்காதாஸ் தனது 81-ஆவது வயதில் காலமானாா். அவரது 385-ஆவது பிறந்த தினத்தையொட்டி சிலை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பொதுவாக அரசியல் கட்சிகள் என்றால் சொல்வது ஒன்று செய்வது வேறாக இருக்கும் என்று கூறப்படுவது வழக்கம். ஆனால், பாஜக அதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டது. என்ன சொல்லப்படுகிறதோ, அதைத் செய்து காட்டும் கட்சியாக பாஜக திகழ்கிறது. ஏனெனில், நாங்கள் மண்ணின் மைந்தா்களான வீர துா்காதாஸ் போன்ற மாபெரும் தலைவா்களின் வழியையொட்டி வாழ்ந்து வருகிறோம். வீர துா்காதாஸ் மதநல்லிணக்கத்துக்காக பெரிதும் பாடுபட்டாா்.

இப்போது நாட்டில் சில சக்திகள் ஹிந்து-முஸ்லிம் இடையே பிரச்னையையும், பிளவையும் ஏற்படுத்த முயலுகின்றன. இந்த நேரத்தில் வீர துா்காதாஸ் போன்ற தலைசிறந்த மனிதா்களின் வழிகாட்டுதல்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வீர துா்காதாஸ் துணிவின் மறுஉருவமாகவும், போா்களத்தில் நெஞ்சுறுதி மிக்கவராகவும், தியாகத்தின் இருப்பிடமாகவும் திகழ்ந்தாா். ஒரு ராஜ்யத்தையை தனிநபராக நின்று பாதுகாத்தாா்.

ராணுவ தளவாட தன்னிறைவு:

மத்திய அரசு மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் ராணுவ தளவாட ஏற்றுமதியில் முதல் 25 நாடுகள் பட்டியலுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஆயுதத் தேவையில் தன்னிறைவு பெறுவதுடன், நட்பு நாடுகளுக்கும் ஆயுதங்கள் உருவாக்கி அளிக்கும் திறனைப் பெறும். இந்தியாவில் உருவாக்குவோம் திட்டம், உலகுக்காக உருவாக்குவோம் திட்டமாக முன்னேற்றமடையும். இதற்காக ராணுவ தளவாட தயாரிப்புத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்நாட்டிலும், எல்லைப் பகுதியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் உறுதியுடன் செயல்படுகிறது. எல்லையில் தொல்லை தருவோருக்கு உடனுக்குடன் உரிய பதிலடி கொடுக்கப்படுகிறது என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT