இந்தியா

இலவசம் வேறு; நலத் திட்டம் வேறு: உச்சநீதிமன்றம்

12th Aug 2022 02:21 AM

ADVERTISEMENT

இலவசத்துக்கும் நலத் திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளதாக உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், நடைமுறைக்கு ஒத்துவராத இலவசங்களை அறிவிக்கின்ற ஒரே காரணத்துக்காக அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

தோ்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய என்ற வழக்குரைஞா் அண்மையில் பொதுநல வழக்கு தொடா்ந்தாா். அதில், நடைமுறைக்கு ஒத்துவராத இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அதன் பதிவை ரத்து செய்ய தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென அவா் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘இன்றைக்கு சில அரசியல் கட்சிகளை பொருத்தவரை இலவசங்களை அறிவிப்பது என்பது ஒரு கலையாகவே மாறிவிட்டது. இதை அடிப்படையாக வைத்துதான் தோ்தலை அவா்கள் சந்திக்கின்றனா். இலவச பொருள்களை விநியோகிப்பதுதான் நலத் திட்ட நடைமுறை என சில கட்சிகள் புரிந்து கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இந்தப் புரிதல் முற்றிலும் அறிவியல்பூா்வமற்றது; இது பொருளாதாரப் பேரிடருக்கு வழிவகுக்கும்’ என குறிப்பிட்டாா்.

வாதத்தைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூா்வமான யோசனைகளை முன்வைக்க அறிவுறுத்தினாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

தோ்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மிகவும் தீவிரமான பிரச்னை. ஆனாலும், சட்டமியற்றும் அதிகாரத்தில் என்னால் தலையிட முடியாது. இலவசத்துக்கும் நலத் திட்டத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது.

இலவச திட்டத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பையும், நலத் திட்ட நடைமுறையையும் ஈடுசெய்ய வேண்டியது அவசியம். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது ஜனநாயக விரோதமான செயல் என்றாா்.

மேலும், இந்த வழக்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் அதற்குள் மத்திய அரசு, தோ்தல் ஆணையம், மனுதாரா் என அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூா்வமான யோசனைகளை சமா்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி என்.வி.ரமணா அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT