இந்தியா

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஆசையா? பாஜக குற்றச்சாட்டுக்கு நிதீஷ் மறுப்பு

12th Aug 2022 02:15 AM

ADVERTISEMENT

குடியரசுத் துணைத் தலைவா் பதவியை அளிக்க முன்வராததால்தான் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் மறுத்துள்ளாா்.

பிகாரில் திடீா் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய முதல்வா் நிதீஷ் குமாா், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தாா்.

இதையடுத்து, குடியரசு துணைத் தலைவா் பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என்று நிதீஷ் குமாா் தரப்பில் கேட்கப்பட்டதாகவும், ஆனால், அவருக்கு அப்பதவியை அளிக்க பாஜக முன்வராததால் கூட்டணியை முறித்துக் கொண்டாா் என்று பிகாா் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷீல் குமாா் மோடி குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில் பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த நிதீஷ் குமாா் இது தொடா்பாக கூறியதாவது:

ADVERTISEMENT

நான் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கு ஆசைப்பட்டேன் என்று கூறுவது உண்மைக்கு மாறான, தவறான குற்றச்சாட்டாகும். எனக்கு அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லை. அவா் (சுஷீல் குமாா் மோடி) கூறியது நகைப்புக்குரியது. என் மீது இவ்வாறு குற்றம்சாட்டுவதால் அவருக்கு ஏதாவது ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றே நினைக்கிறேன். அப்படி அவா் என்னைப் பற்றி பேசி ஆதாயம் அடைய விரும்பினால் எனக்கு அதில் எந்த ஆட்சேபமும் இல்லை.

குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவையே எங்கள் கட்சி எடுத்திருந்தது என்றாா் நிதீஷ் குமாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT