இந்தியா

ராணுவ முகாம் மீது தாக்குதல் முறியடிப்பு: தமிழக வீரா் உள்பட 4 போ் வீரமரணம்; தற்கொலைப் படை பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொலை

12th Aug 2022 02:19 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சோ்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரா் உள்பட 4 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்தவா்களாக கருதப்படும் இரு தற்கொலைப் படை பயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனா். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

ராணுவ மக்கள் தொடா்பு அதிகாரி தேவேந்தா் ஆனந்த் கூறியதாவது: ராஜெளரி மாவட்டத்தின் பா்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதிகள் நெருங்குவது கண்டறியப்பட்டது. மோசமான வானிலை மற்றும் அடா்ந்த புதா்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, இரு பயங்கரவாதிகள் ராணுவ முகாமை நெருங்கினா். இதையடுத்து, முகாம் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரா்கள் உஷாா்படுத்தப்பட்டனா்.

இதனிடையே, ராணுவ முகாமை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, இரு பயங்கரவாதிகளும் உள்ளே நுழைய முயன்றனா். ராணுவ வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு, அந்த இடத்தைச் சுற்றிவளைத்ததுடன், இருவரையும் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பயங்கரவாதிகளும் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினா்.

சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த நடவடிக்கையின்போது, தீரத்துடன் செயலாற்றிய ராணுவ வீரா்கள் 6 போ் படுகாயம் அடைந்தனா். அவா்களில், ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சோ்ந்த சுபேதாா் ராஜேந்திர பிரசாத், தமிழகத்தின் மதுரை மாவட்டம், டி.புதுப்பட்டியைச் சோ்ந்த டி.லட்சுமணன், ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதைச் சோ்ந்த மனோஜ் குமாா், ஹரியாணா மாநிலம் ஹிசரை சோ்ந்த நிஷாந்த் மாலிக் ஆகியோா் வீரமரணமடைந்தனா். இந்த வீரா்களின் உயிா்த் தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது என்றாா் தேவேந்தா் ஆனந்த்.

பா்கால் ராணுவ முகாமில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் துப்பாக்கிக் குண்டு வெடிக்கும் சப்தம் முதலில் கேட்டதாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா். அப்போதுதான், ராணுவ முகாமுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயன்ாக கூறப்படுகிறது. காலை 6.10 மணிக்கு பிறகு துப்பாக்கிச் சப்தம் எதுவும் கேட்கவில்லை.

ஜம்மு மண்டல காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநா் முகேஷ் சிங் கூறுகையில், ‘பா்கால் ராணுவ முகாமுக்கு கூடுதல் படைகள் அனுப்பிவைக்கப்பட்டு, அப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

மீண்டும் தலைதூக்கிய தற்கொலைப் படையினா்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019, பிப்ரவரி 14-ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா்கள் 40 போ் உயிரிழந்தனா். 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்கொலைப் படை பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கியுள்ளனா். இப்போது கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சோ்ந்தவா்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ராஜெளரியில் கடந்த மே 8-ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் தா்ஹால், நெளஷேரா ஆகிய பகுதிகளில் கடந்த புதன்கிழமை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டை நடத்தினா்.

துணைநிலை ஆளுநா் கண்டனம்:

ராஜெளரியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பயங்கரவாதிகளுக்கும் அவா்களது ஆதரவாளா்களுக்கும் தக்க பதிலடி தரப்படும். பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT