இந்தியா

நாட்டின் சேவையில் எனது பயணம் தொடரும்: பதவி நிறைவு நாளில் வெங்கையா நாயுடு

DIN

குடியரசு துணைத் தலைவர் பதவிக் காலம் நிறைவடைந்தும், நாட்டுக்கான சேவையில் முடிவடையாத பயணத்தை மீண்டும் தொடர இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புதன்கிழமை கூறினார்.
நாட்டின் 13-வது குடியரசு துணைத் தலைவரான வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையொட்டி, செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது
அடுத்தகட்ட திட்டம் குறித்து வெங்கையா நாயுடு பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
நான் என்னுடைய பயணத்தை மீண்டும் தொடருவேன். மக்களுடன் உரையாடுவது எனக்கு மிகுந்த ஆனந்தத்தை தருகிறது. குறிப்பாக அரசு மற்றும் அமைப்புகளிடம் இருந்து அதிக கவனம் தேவைப்படும் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுடன் உரையாடுவதே எனது இலக்கு. ஆதரவு அளித்த ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
மாநிலங்களவையின் தலைவராகப் பதவி வகித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் வெங்கையா நாயுடு மரக்கன்றை நட்டார். சூழலியல் சமநிலையைப் பேண மரங்களைப் பாதுகாக்கவும், மரம் நடுதல் குறித்து விழிப்புணர்வு பரப்புதலும் வேண்டும் என வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
தில்லியில் தியாகராஜா சாலையில் உள்ள அலுவலக குடியிருப்பு வெங்கையா நாயுடுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டு பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த வெங்கையா நாயுடு, சில ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைவரானார்.
ஊரக மேம்பாடு, நகர்ப்புற மேம்பாடு, தகவல் தொடர்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் போன்ற துறைகளில் அமைச்சராகப் பொறுப்பு வகித்த வெங்கையா நாயுடு, கடந்த 2017-ஆம் ஆண்டு குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். இவர் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசு துணைத் தலைவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.
மக்களின் குடியரசு துணைத் தலைவர்: மாநிலங்களவைச் செயலகம் வெங்கையா நாயுடு பதவிக் காலத்தின் கடைசி நாளில் அவர் குறித்த குறிப்பை வெளியிட்டது. அதில், "மக்களின் குடியரசு துணைத் தலைவர்' எனக் குறிப்பிட்டுள்ளது.
"பல நிகழ்ச்சிகள், கூட்டங்களில் அவர் தாய்மொழியின் பயன்பாட்டைப் பரப்புமாறு அறிவுறுத்துவார். தாய், தாய்நாடு, தாய்மொழி இவையே நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என எப்போதும் வலியுறுத்தி வந்தார்.
மாநிலங்களவையின் 13 முழு அமர்வுகளுக்கும், தற்போது முடிந்த 14-ஆவது மழைக்கால கூட்டத்தொடருக்கும் தலைமை வகித்தார். இந்த அமர்வுகளில் ஐந்து அமர்வுகள் 100 சதவீத செயல்பாட்டுத் திறனைப் பதிவு செய்தன. ஒட்டுமொத்தமாக 70 சதவீதம் செயல்பாட்டுத் திறன் கிடைத்தது.
மேலும், அரசியலமைப்பின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 அதிகாரபூர்வ மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பேச உறுப்பினர்களை ஊக்குவிக்கும் முக்கிய முயற்சி எடுக்கப்பட்டதோடு கூடுதலாக, மொழிபெயர்ப்பாளர்கள் வசதியும் வெங்கையா நாயுடு தலைமையில் செய்யப்பட்டுள்ளது' என அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT