இந்தியா

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் 2024 வரை நீட்டிப்பு: அமைச்சரவை ஒப்புதல்

11th Aug 2022 03:50 AM

ADVERTISEMENT

பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமரின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தை 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டி முடிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் கால அவகாசம் கோரியிருந்த நிலையில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்தத் திட்டத்துக்கு ரூ.2.03 லட்சம் கோடி நிதியுதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஏற்கெனவே ரூ.1.18 லட்சம் கோடி மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2024-ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை ரூ.85,406 கோடி விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Cabinet
ADVERTISEMENT
ADVERTISEMENT