இந்தியா

ரூ.390 கோடி பறிமுதல்: மாப்பிள்ளை ஊர்வலம் கெட்டப்பில் சென்ற வருமான வரி அதிகாரிகள்

11th Aug 2022 03:57 PM

ADVERTISEMENT

ஜால்னா: இன்று பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் முக்கியமானது மகாராஷ்டிரத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனைதான்.

தாங்கள் நடத்தும் சோதனை வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இரண்டு தொழிலதிபர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்த ஏராளமான கார்களில் அதிகாரிகள் சென்றால் சந்தேகம் வந்துவிடும் என்பதற்காக, அவர்கள் மாப்பிள்ளை ஊர்வலம் செல்வது போல வாகனங்களை அலங்காரம் செய்து கொண்டு ஜால்னா மாவட்டத்துக்குள் நுழைந்த ஆச்சரியம் தரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.390 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் மும்பை, ஜால்னா, ஔரங்காபாத், புனே உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இரண்டு தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்டத்துக்குள் சுமார் 200 பேர் இத்தனை வாகனங்களில் நுழைந்தால் தகவல் கசிந்துவிடுமோ என்று அஞ்சி, மாப்பிள்ளையுடன் ஊர்வலம் வரும் உறவினர்கள் போல 60 வாகனங்களில் அலங்காரமாகச் சென்றிருக்கிறார்கள் வருமான வரித்துறையினர், அதிகாலையிலேயே ஜால்னா மாவட்டத்துக்குள் நுழைந்த இவர்கள், அட்ஙகு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனை நடத்தி ரூ.390 கோடி வரை பணம், நகை, சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜால்னாவில் தொழிலதிபர்கள் சிலர்தான் உள்ளனர். எனவே, வருமான வரித்துறை வாகனங்கள் நகருக்குள் நுழைந்தாலே அவர்கள் உஷாராகி, பணத்தை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்றுவிடும் அபாயம் இருந்தது. எனவே, தான் மாப்பிள்ளை ஊர்வலம் கெட்டப் போடப்பட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

மகாராஷ்டிர மாநிலம் ஜால்னாவில் ஒரு வணிகக் குழுமம், வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்து வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, மிகப்பெரிய அளவிலான சோதனைக்கு வருமான வரித்துறை திட்டமிட்டது.

மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் அதிரடியாக 260 வருமான வரித்துறை அதிகாரிகள் ஐந்து குழுக்களாகப் பிரிந்து பல்வேறு இடங்களில் சோதனையை நடத்தினர்.

இரண்டு வணிக நிறுவன குழுமத்தின் உரிமையாளர்கள் வீடு, அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு பெரிய அளவில் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியாக அவர்கள் பண்ணை வீட்டில் நடத்திய சோதனையின் போது எதிர்பாராத வகையில் பணம், நகை, வைரம் என ரூ.390 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருமானத்தை மறைத்து வாங்கப்பட்டிருக்கும் சொத்துகள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி.. இந்த 390 கோடி எந்தெந்த ரூபத்தில் இருந்தது என்றால்.. ரூ.56 கோடி ரொக்கப் பணம்.. இதை ஒட்டுமொத்தமாக எண்ணி முடிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனதாம்.

32 கிலோ எடையுள்ள தங்க, முத்து, வைர நகைகள். இவற்றின் மதிப்பு ரூ.14 கோடி இருக்கலாம். இதில்லாமல் சொத்து ஆவணங்கள், முதலீடு பத்திரங்கள் போன்றவை ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | விரைவில் சென்னை - மும்பை ரயில் பயண நேரம் குறைகிறது

இந்த இரண்டு வணிகக் குழுமமும் இரும்பு, ஆடை மற்றும் கட்டுமானத் தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்தச் சோதனைக்காக வருமான வரித்துறையினர் சுமார் 120 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தனை அதிகாரிகள், இத்தனை வாகனங்கள், இத்தனை ரகசியம் காக்கப்படும்போதே, இந்த வருமான வரித்துறை சோதனை எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்கும்.

தற்போது வரை வருமான வரித்துறை, இந்த சோதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. சொத்து மதிப்புகளை கணக்கிட்டு விரைவில் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT