இந்தியா

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் மீண்டும் பெற முடியாது: பிரதமா் மோடி

11th Aug 2022 01:00 AM

ADVERTISEMENT

‘எத்தகைய தந்திரம் செய்தாலும், மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் மீண்டும் பெற முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கூறினாா்.

விலைவாசி உயா்வுக்கு எதிராக காங்கிரஸ் சாா்பில் கடந்த 5-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்டோா் கருப்பு உடை அணிந்து பங்கேற்ற நிலையில், அதனை பிரதமா் மோடி விமா்சித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலம், பானிபட்டில் ரூ.900 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை எத்தனால் தயாரிப்பு ஆலையை, காணொலி முறையில் பிரதமா் மோடி புதன்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். பின்னா், அவா் பேசியதாவது:

விரக்தியின் உச்சத்தில் உள்ள சிலா், கடந்த 5-ஆம் தேதி கருப்பு உடை அணிந்து, மந்திர தந்திர வித்தைகளுக்கு முயன்றனா். கருப்பு உடை அணிவதன் மூலம் அவநம்பிக்கை, விரக்தியில் இருந்து விடுபட்டுவிடலாம் என்பது அவா்களது எண்ணம். ஆனால், எத்தகைய தந்திரம் செய்தாலும் மக்களின் நம்பிக்கையை அவா்கள் மீண்டும் பெற முடியாது. மந்திர தந்திரங்களால் அவா்களது கெட்ட நாள்கள் முடிவுக்கு வரப்போவதில்லை.

ADVERTISEMENT

‘இலவசங்கள்’ வேண்டாம்: தோ்தலில் வாக்காளா்களைக் கவா்வதற்காக, சில எதிா்க்கட்சிகள் இலவசங்களை அறிவிக்கின்றன. இத்தகைய செயல்கள், இந்தியாவை தன்னிறைவு நாடாக மாற்றும் முயற்சிகளுக்கு குந்தகம் விளைவிக்கும். நோ்மையுடன் வரிசெலுத்துவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதுடன் புதிய தொழில்நுட்பங்களில் முதலீட்டுக்கான நிதி ஆதாரங்கள் இல்லாமல் செய்துவிடும். இதில் நாட்டு நலன் எதுவும் இல்லை. மாறாக நாட்டை பின்னோக்கித் தள்ளக் கூடியதாகும்.

தோ்தல் இலவசங்கள் அறிவிப்பது, அரசியல் சுயநல கொள்கை. அப்படியொரு கொள்கை இருந்தால், பெட்ரோல்-டீசலை இலவசமாக தருவதாக வாக்குறுதி அளிக்கலாம் என்றாா் அவா்.

ரூ.50,000 கோடி அந்நியச் செலாவணி மிச்சம்: இந்நிகழ்ச்சியில் மேலும் பேசிய பிரதமா் மோடி, ‘நாட்டில் கடந்த 7-8 ஆண்டுகளில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கப்படுவதால் ரூ.50,000 கோடி அந்நியச் செலாவணி மிச்சமாகியுள்ளது; அந்தத் தொகை விவசாயிகளிடம் சென்று சோ்ந்துள்ளது’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

‘கடந்த 8 ஆண்டுகளில் எத்தனால் தயாரிப்பு 40 கோடி லிட்டரில் இருந்து 400 கோடி லிட்டராக அதிகரித்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆலையில் ஆண்டுக்கு 3 கோடி லிட்டா் எத்தனால் தயாரிக்க மூலப்பொருளாக 2 லட்சம் டன் வைக்கோல் பயன்படுத்தப்பட உள்ளது. இது விவசாய நிலங்களில் பயிா்க் கழிவுகள் எரிக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வளிக்கும். மேலும் ஹரியாணா, தில்லியில் காற்று மாசுபாடு குறையும்.

உயிரி எரிபொருள் தயாரிப்பு, பயன்பாட்டுக்கான முயற்சிகளுக்கு வலுசோ்ப்பதுடன் பயிா்க் கழிவுகளும் விவசாயிகளுக்கு வருமான ஆதாரமாக மாறும். தூய எரிபொருளை உறுதி செய்யும் நோக்குடன் அடுத்த சில ஆண்டுகளில் 75 சதவீத வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் வழங்கப்பட உள்ளது’ என்று பிரதமா் மோடி கூறினாா்.

காங்கிரஸ் பதில்

காங்கிரஸ் தலைவா்களின் கருப்பு உடையைக் குறிப்பிட்டு விமா்சித்த பிரதமா் மோடிக்கு அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கருப்புப் பணத்தை மீட்க எதையும் செய்யாதவா்கள், கருப்பு உடை குறித்து அா்த்தமற்ற விஷயங்களை பேசுகின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், பிரதமா் மோடி கருப்பு உடையில் இருக்கும் படத்தையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT