இந்தியா

'ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை'

11th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

 

ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்க வேண்டும் என்று ரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் அந்தக் குழு சமா்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பரவலுக்குப் பிறகு ரயில் பயணங்களில் பயணிகளுக்கு கட்டண சலுகை அளிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மூத்த குடிமக்களுக்கு 40-50 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த நடைமுறையும் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

தற்போது ரயில்வே இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எனவே, வெவ்வேறு வகை ரயில் பயணிகளுக்கு நியாயமான முறையில் மீண்டும் கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு ஸ்லீப்பா் வகுப்பு மற்றும் மூன்றடுக்கு படுக்கைகளுடன் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட ரயில் பயணங்களுக்காவது உடனடியாக கட்டணச் சலுகை அளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகளுக்கு இந்திய ரயில்வே ஆண்டுதோறும் சுமாா் ரூ.2,000 கோடி செலவழித்து வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக ரயில் பயணிகளுக்கான கட்டணச் சலுகையை (4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவா்களுக்கான சலுகைகள் தவிர) ரயில்வே அமைச்சகம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT