இந்தியா

பிகார் ஆட்சி மாற்றத்துக்கு மரியாதை நிமித்தமான அழைப்புதான் காரணமா?

11th Aug 2022 06:19 PM

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பிறகு, பிகாா் மாநில முதல்வராக எட்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் புதன்கிழமை பதவியேற்றாா். துணை முதல்வராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

பிகாரில் பாஜகவுடனான கூட்டணியை செவ்வாய்க்கிழமை முறித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, மாநிலத்தில் மகா கூட்டணி அரசை அமைப்பதற்காக ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அவா் கைகோர்த்தாா்.

இதையும் படிக்க |  'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்

பின்னா், ஆளுநரைச் சந்தித்து, மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். 164 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகத் தெரிவித்த நிதீஷ் குமாா், அதற்கான கடிதத்தையும் அளித்தாா்.

ADVERTISEMENT

இதன் தொடா்ச்சியாக, நிதீஷ் குமாரும், தேஜஸ்வி யாதவும் புதன்கிழமை பதவியேற்றனா். இந்த நிகழ்வில் பாஜக தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை.

இது அனைத்துக்கும் ஒரே ஒரு மரியாதை நிமித்தமான தொலைபேசி அழைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது. அந்த அழைப்பை மேற்கொண்டவர் நிதீஷ் குமார். அழைக்கப்பட்டவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா.

சோனியாவுக்கு கரோனா பாதித்திருந்த போது, அவரை தொலைபேசி வாயிலாக அழைத்திருந்த நிதீஷ் குமார் முதலில், சோனியாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார். பிறகு, தனக்கு மாநில அரசில் பாஜக கொடுக்கும் அழுத்தம் குறித்து சோனியாவிடம் நிதீஷ் குறைபட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பிகாரில், பாஜக தனது கட்சியையும் உடைக்கப்பார்ப்பதாகவும் அவர் கூறியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | 300 அதிகாரிகள், 120 வாகனம்.. வருமான வரித்துறையின் பிரமாண்ட சோதனை: கிடைத்ததோ வெறும் ரூ.390 கோடி

அப்போதுதான், பிகாரில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உதவுமாறு சோனியாவிடம் நிதீஷ் குமார் கேட்டதாகவும், இது தொடர்பாக ராகுலிடம் பேசுமாறு சோனியா கூறியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உடனே இந்தப் பொறுப்பை நிதீஷ் குமார் தேஜஸ்வி யாதவிடம் கொடுத்தார். தேஜஸ்வி யாதவ், ராகுல் காந்தியை தொடர்பு கொண்டு பேசினார். அவரும், கட்சியின் பிகார் மாநில தலைவர் பக்த சரன் தாஸிடம் பேசிவிட்டு தகவல் தெரிவிப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதன்பிறகுதான் பிகாரில் அந்த மகாராஷ்டிர மாடலுக்குப் பதிலாக பிகார் மாடலே அரங்கேறியது. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மாறின. 

ஆனால், குடியரசு துணைத் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படாததாலேயே நிதீஷ் கூட்டணியை முறித்துக் கொண்டதாக பிகார் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷீல் குமார் குற்றம்சாட்ட, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை நான் கேட்டேனா என்று நிதீஷ் குமார் பதிலளித்துள்ளார்.

அமைச்சா் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆளும் மகா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளிடையே முடிவு எட்டப்பட்ட பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

35 அல்லது அதற்கு மேற்பட்டோரை உள்ளடக்கிய புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்து கொள்கை அளவில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை நிதீஷ் வசமே இருக்கும் எனத் தெரிகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT