இந்தியா

பீடித் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் பயிற்சி: மத்திய அமைச்சர் பூபேந்தர யாதவ் மக்களவையில் தகவல்

11th Aug 2022 03:51 AM | நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

பீடித் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாடு முழுவதும் 285 மருந்தகங்கள், 10 மருத்துவமனைகளில் சுகாதாரப் பராமரிப்பு வசதி வழங்கப்படுகிறது என்றும், இந்த தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் செல்வதற்குரிய பயிற்சியும் வழங்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல், தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
புகையிலை அச்சுறுத்தலிலிருந்து பீடித் தொழிலாளர்கள், பெண்களை பாதுகாக்கும் ஆரோக்கிய திட்டங்கள், நலத்திட்டங்கள் சென்றடைய கண்டறிப்படும் முன்மொழிவுகள் போன்றவை குறித்து நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி சிபிஐ உறுப்பினர் எம்.செல்வராஜ் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர யாதவ் பதிலளித்து கூறியதாவது:
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பீடித் தொழிலாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்காக சுகாதார வசதி, உதவித் தொகை, வீட்டு வசதி ஆகிய மூன்று கூறுகள் அடிப்படையில் தொழிலாளர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
சுகாதாரம்: நாடு முழுவதும் அமைந்துள்ள 285 மருந்தகங்கள், 10 மருத்துவமனைகளின் வலையமைப்புடன் சுகாதார பராமரிப்பு வசதி வழங்கப்படுகிறது. இதில் இந்தத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர், புற்றுநோய், காசநோய், இதய நோய்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, குடலிறக்கம், குடல் அறுவை சிகிச்சை, அல்சர், மகப்பேறு மருத்துவம் போன்ற தீவிர நோய்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பெறலாம்.
இதில், இந்தத் தொழிலாளர்களின் மருத்துவ செலவினங்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பீடித் தொழிலாளர்கள் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
உதவித் தொகை: முதல் வகுப்பு முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் வரை பயிலும் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கான நிதி உதவிக்கு ஒரு மாணவருக்கு வகுப்பைப் பொருத்து ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.
வீட்டுவசதி: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பீடித்தொழிலாளர்கள் வீடு கட்ட தலா ரூ.1,50,000 மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்த மூன்று தொழிலாளர் நலத் திட்டங்கள் சென்னை உள்ளிட்ட 17 பிராந்தியங்களில் அமைந்துள்ள தொழிலாளர் நல அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் சென்னை பிராந்தியத்தில் கடந்த 2019-20 முதல் 2021-22 வரை மூன்று ஆண்டுகளில் 8,59,123 பேருக்கு மருத்துவ சிகிச்சையும் இதே மூன்று நிதியாண்டுகளில் 493 பேர் வீட்டு வசதியையும் பிடித்தொழிலாளர்கள் பெற்றுள்ளனர்.
அதேசமயதத்தில் பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரப்பட்ட கல்வி உதவித் தொகை குறித்த தனித்தனி தரவு எதுவும் பராமரிக்கப்படவில்லை.
மாற்றுத் தொழில்: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து இத்தகைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கு மாற்று வேலைகளில் ஈடுபடுவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT