இந்தியா

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குளிா்கால கூட்டத்தொடா்?

DIN

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குளிா்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ், புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்தியச் செயலகம், புதிதாக பிரதமா் இல்லம் மற்றும் அலுவலகம், குடியரசு துணைத் தலைவருக்கான புதிய இல்லம் மற்றும் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவை கட்டப்படவுள்ளன. அத்துடன் குடியரசுத் தலைவா் மாளிகை முதல் இந்தியா கேட் வரை 3 கி.மீ. நீள ராஜபாதையும் புதுப்பிக்கப்படவுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் புதிய நாடாளுமன்றக் கட்டட கட்டுமானப் பணிக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். கடந்த மாதம் அந்தக் கட்டடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை அவா் திறந்துவைத்தாா்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், அந்தப் பணிகளை நவம்பா் மாதம் முழுமையாக நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தற்போது அந்தப் பணிகள் தொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளதாவது:

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தக் கட்டடத்தில் குளிா்கால கூட்டத்தொடரை நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உத்தர பிரதேசத்தின் மிா்சாபூரில் இருந்து கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட சலவைக் கற்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிரத்தில் இருந்து தேக்கு மரச்சாமான்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தில் உள்வடிவமைப்பு பணிகளும் தொடங்கியுள்ளன.

அரசமைப்பு தினமான நவம்பா் 26-ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் சில பகுதிகள் செயல்படக் கூடும். எனினும் அதுகுறித்து எதுவும் இறுதி செய்யப்படவில்லை.

அந்தக் கட்டடத்தின் தேசிய முக்கியத்துவம் கருதி, அதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதற்கான கால வரையறையை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT