இந்தியா

வெங்கையா நாயுடு, ஜகதீப் தன்கருக்கு ஓம் பிர்லா விருந்து

10th Aug 2022 03:42 AM

ADVERTISEMENT

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் அப்பதவிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா விருந்து அளித்தார்.
 குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் புதன்கிழமையுடன் (ஆக. 10) முடிவடைகிறது. அடுத்த குடியரசு துணைத் தலைவராக தன்கர் வியாழக்கிழமை பதவியேற்க உள்ளார்.
 இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் அப்பதவிக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார்.
 இது தொடர்பான புகைப்படங்களை ஓம் பிர்லாவும் ஜகதீப் தன்கரும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த நிகழ்வில் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
 இது தொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெங்கையா நாயுடுவும் ஓம் பிர்லாவும் ஜகதீப் தன்கருடன் தேசிய நலன், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் இருக்கிறார்.
 ஜகதீப் தன்கர் பொறுப்பேற்ற பின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் தலைவர்களாகவும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
 மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT