இந்தியா

பயணிகளின் தனியுரிமைக்கு பாதிப்பா? விமான நிறுவனங்களுக்கு புதிய விதி

10th Aug 2022 12:36 PM

ADVERTISEMENT

 

வெளிநாட்டுப் பயணிகளின் அனைத்து விவரங்களையும் பயணத்திற்கு முன்பே மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக, இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும் பயணிகளுக்கு விசாவில் ஆரம்பித்து விமானம் ஏறும்வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தற்போது, சர்வதேச விமானத்தில் பயணம் செய்யவிருக்கும் பயணிகளின் முழு விவரங்களையும் சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் 24 மணிநேரத்திற்கு முன்னதாகவே சுங்கத்துறையிடம் சமர்பிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச பயணிகளின் பெயர், வயது, தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பயணச்சீட்டு முன்பதிவு செய்த கிரெடிட் / டெபிட் கார்டு எண் என அனைத்து விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எல்லை தாண்டிய பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காக, பிஎன்ஆர் தகவல் ஒழுங்குமுறை விதிமுறையில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இதன்மூலம், பிஎன்ஆர் விவரங்களை சேகரிக்கும் 60 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.

சுங்கத்துறைக்கு பிஎன்ஆர் விவரங்கள் அனுப்பப்படுவதன் மூலம், சுங்கச் சட்டத்தின் கீழ், குற்றங்களைத் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மற்றும் வழக்குத் தொடர பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு சட்டம் - ஒழுங்கு அமைப்புகளுக்கும் இந்த தகவல்கள் பகிரப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள விமான நிறுவனங்கள் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் பகிர வேண்டும் என விதிமுறை கொண்டுவரப்பட்ட போது, நீதிமன்றம் தலையிட்டு, தனிமனித உரிமை பாதிக்கப்படுவதாக கூறியதால், விதிகள் தளர்த்தப்பட்டது.

இதுபோன்ற விதிமுறைகள், குற்றங்களைத் தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டாலும், தனியுரிமையை பெரிதும் பாதிக்கும் வகையில் இருப்பதாக விமானப் பயணிகள் கருதுகிறார்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT