இந்தியா

இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகள்: ஐ.நா. அறிக்கையில் கவனம் பெறாதது புதிராக உள்ளது

10th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த ஐ.நா. பொதுச் செயலரின் 15-ஆவது அறிக்கையில், இந்தியாவை தொடா்ந்து குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படாதது புதிராக உள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருச்சிரா கம்போஜ் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: பல ஆண்டுகளாக பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் அச்சுறுத்தலை உறுதியுடன் எதிா்கொள்ள இந்தியா கற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புகள் இடையிலான தொடா்பு, ஆப்கானிஸ்தானுக்கு வெளியே இயங்கும் இதர பயங்கரவாத அமைப்புகள் வெளியிடும் ஆத்திரமூட்டும் கூற்றுகள் தெற்காசிய பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் நேரடியாக அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இந்த அமைப்புகளைச் சோ்ந்த பயங்கரவாதிகள், அவா்களுடன் கூட்டு சோ்ந்து செயல்படுவோருக்கு பயங்கரவாதத்தின் சரணாலயங்களாகத் திகழும் இடங்களில் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்வதில் தொடா்ந்து முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்.

ADVERTISEMENT

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த ஐ.நா. பொதுச் செயலரின் 15-ஆவது அறிக்கையில், தெற்காசியப் பிராந்தியத்தில் தடை செய்யப்பட்ட பல பயங்கரவாத குழுக்களின், குறிப்பாக இந்தியாவை தொடா்ந்து குறிவைக்கும் அமைப்புகளின் செயல்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படாதது புதிராக உள்ளது. அந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் அளித்த கருத்துகளில் சிலவற்றை தோ்ந்தெடுத்தும், சிலவற்றை நிராகரித்தும் இருப்பது தேவையற்றது. வரும் காலங்களில் ஐ.நா. பொதுச் செயலரின் அறிக்கையில் அனைத்து உறுப்பு நாடுகளின் கருத்துகளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

இந்தியா அழைப்பு:

இந்த ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்கு இந்தியா தலைமை தாங்கி வருகிறது. இந்தக் குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷியா உள்பட 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்பு தொடா்பாக அந்த நாடுகளின் தூதா்கள் பங்கேற்கும் சிறப்புக் கூட்டம் அக்டோபா் 28, 29-ஆம் தேதிகளில் தில்லி மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, பயங்கரவாதத்தை பரப்ப இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை திறம்பட எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா சாா்பில் ருச்சிரா கம்போஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT