இந்தியா

வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி விலக்கு பெற முடியுமா?

10th Aug 2022 02:15 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

வெட் கிரைண்டர்கள் உற்பத்தி செய்யும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் விற்றுமுதல் ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், சரக்கு, சேவை வரியிலிருந்து (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார். அவர், சமீபத்தில் வெட் கிரைண்டர்களுக்கு (மாவரைக்கும் இயந்திரங்கள்) ஜிஎஸ்டி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டதால், பெரும்பாலான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், வெட்கிரைண்டர்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை அரசு குறைக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
 இதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில்:
 ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் வரி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கவுன்சிலின், 47-ஆவது கூட்டத்தில், வெட்கிரைண்டர் உள்பட, வரி கட்டமைப்பை சரிசெய்ய சில பொருள்களின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மறுஅளவீடு செய்ய பரிந்துரைத்தது. இதில் வெட்கிரைண்டருக்கு ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதம் நிலையான விகிதமாக மாற்றியமைக்கப்பட்டது. மேலும், ரூ. 40 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு விற்றுமுதல் கொண்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சரக்குகளில் ரூ. 1.5 கோடி வரை ஆண்டு விற்றுமுதல் கொண்ட உற்பத்தியாளர்கள், மொத்த விற்றுமுதலில் ஒரு சதவீதத்தில் ஜிஎஸ்டி செலுத்தும் கலவை திட்டத்தைத் (காம்போசிஷன் ஸ்கீம் ) தேர்வு செய்யலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு உள்ள ஓர் எளிமையான வழி காம்போசிஷன் ஸ்கீம் ஆகும். சிறு வணிகர்கள் குறிப்பிட்ட அளவிலான விற்றுமுதல் வரை சிரமமான ஜிஎஸ்டி தாக்கல்
 முறையிலிருந்து விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT