இந்தியா

மகாராஷ்டிர மாடலை பிகாரில் முயன்ற பாஜக: ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றிய நிதீஷ்!

DIN

பிகார் மாநிலத்தில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார், நேற்று மாலை பிகார் ஆளுநரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.

பிறகு, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகளின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதையடுத்து இன்று மாலை பிகார் முதல்வராக 8வது முறையாக பதவியேற்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிர மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே போல ஒரு அரசியல் மாற்றத்தை பிகாரில் கொண்டு வர பாஜக திட்டமிட்டது. ஆனால் அதை மிகத் துல்லியமாக கண்டறிந்து கொண்ட பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ஒட்டுமொத்த ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிவிட்டார்.

ஏக்நாத் ஷிண்டே போல, பிகாரில் ஆர்சிபி சிங்கை வைத்து அரசியல் நாடகத்தை நடத்த பாஜக திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலேயே இருக்க வேண்டும், ஏக்நாத் ஷிண்டேவைப் போல என்று பாஜக கருதியது. ஆனால் இதனை மிகச் சரியான நேரத்தில் அறிந்து கொண்ட நிதீஷ் குமார், ஆர்சிபி சிங்கின் நடவடிக்கைகளில் மாற்றத்தையும் உணர்ந்தார்.

உடனடியாக காய்களை நகர்த்தி, கட்சியிலிருந்து ஆர்சிபி சிங் வெளியேறுவதற்கான அனைத்துக் கதவுகளையும் நிதீஷ் குமார் திறந்துவைத்தார். அதுவும் நடந்தது.

பிகாரில் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது பாஜகவின் கணக்கு. அதற்கு முக்கிய கருவியாக ஆர்சிபி சிங்கையே தேர்வு செய்தது. அப்போது மிகச் சரியாக ஏராளமான ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்களும் ஆர்சிபி சிங்குடன் தொடர்பு வைத்திருந்தனர். அவருடன் சேர்த்து அவரது ஆதரவாளர்களையும் அதிருப்தியாளராக மாற்றுவது திட்டம். ஆனால் ஆர்சிபி சிங் கட்சியிலிருந்து வெளியேறியதால் கணக்கில் சற்று தடுமாற்றம்.

இந்த இடத்தில் செக் வைத்தார் நிதீஷ்குமார், கட்சியின் தேசியத் தலைவர் லலன் சிங்குக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி, ஆர்சிபி சிங்குடன் தொடர்பு வைத்திருக்கும் யாரையும் கட்சியிலிருந்து நீக்க அனுமதி அளித்திருந்தார். இந்த நடவடிக்கையால் பல எம்எல்ஏக்களும் தலைவர்களும்  நிதீஷ் குமாரின் ஆதரவாளர்களாக மாறினர்.

பாஜகவைச் சேர்ந்த தர்மேந்திர பிரதானை பாட்னா வரவழைத்த நிதீஷ் குமார், இதுபோல மீண்டும் நடந்தால்.. என்று நேரடியாகவே எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஆர்சிபி சிங்கின் ராஜிநாமாவுக்குப் பிறகும் அதே அரசியல் நாடகத்தை அரங்கேற்ற பாஜக அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்தது. எடுக்க வேண்டாம் என்று நினைத்திருந்த அந்த மோசமான முடிவை எடுக்க நிதீஷ்குமார் தூண்டப்பட்டார் என்கிறது கட்சியிலிருந்து வெளியாகும் தகவல்கள்.

பாஜகவுடன் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்து பிகாரில் மகாராஷ்டிர மாடலைக் கொண்டு வர திட்டமிடப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்த்து புதிய ஆட்சியை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தார் நிதீஷ் குமார். 

இரு கட்சித் தலைவர்களுடனும் பேசி, ஒரு முடிவு எட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை ஆளுநரை சந்தித்தார் நிதீஷ் குமார். முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக ராஜிநாமா கடிதத்தை அளித்துவிட்டு, இரண்டாவது முறை மீண்டும் ஆளுநரை சந்தித்து புதிய கூட்டணியில் அரசமைக்க உரிமை கோரினார்.

அதேக் கூட்டணி, முதல்வர் வேறு என்று பாஜக போட்ட கணக்கை, துல்லியமாகக் கணித்து எங்கும் கோட்டைவிடாமல் கூட்டணி வேறு, அதே முதல்வர் என்று ஆட்டத்தை தலைகீழாக மாற்றியுள்ளார் நிதீஷ் குமார். மகாராஷ்டிர மாடலை பாஜக முயன்ற நிலையில், மீண்டும் பிகார் மாடலையே அரங்கேற்றியுள்ளார் நிதீஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வருக்கு மாா்க்சிஸ்ட் வேட்பாளா்கள் நன்றி

ஆதினத்துக்கு மிரட்டல்: கல்வி நிறுவன நிா்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன் ஜாமீன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்: அண்ணாமலை

டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவா் டி.லட்சுமி நாராயணன் காலமானாா்

SCROLL FOR NEXT