இந்தியா

பிகாரில் பாஜக கூட்டணி முறிந்தது! மீண்டும் நிதீஷ் - தேஜஸ்வி கூட்டணி?

9th Aug 2022 04:29 PM

ADVERTISEMENT

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகியுள்ளது. இதனால் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே அரசியல் சூழ்நிலையில் மாற்றம் நிலவி வந்தது. கருத்து மோதல் காரணமாக, பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். 

பிகாரில் இன்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்தான் முதல்வர் நிதீஷ் குமார், பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | பாஜக கூட்டணி பலவீனமாக்கிவிடும்: நிதீஷை முன்பே எச்சரித்த எம்.எல்.ஏ.க்கள்

இதையடுத்து, பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. 

கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிதீஷ் குமார் ஆட்சியைத் தொடர்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது பிகார் சட்டப்பேரவையில் ஐக்கிய ஜனதா தளம் - 45, ராஷ்ட்ரிய ஜனதா தளம் - 79, காங்கிரஸ் - 12, இடதுசாரி கட்சிகள்- 12, பாஜக - 77 இடங்களைப் பெற்றுள்ளன. 

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் பிகாரில் நிதீஷ் குமாரின் புதிய அரசு அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் பிகாரில் நிதீஷ் குமார் - தேஜஸ்வி கூட்டணி அமைகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய கூட்டணி அமையும் பட்சத்தில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 

முன்னதாக, கடந்த 2017ல் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடனான கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி வைத்து நிதீஷ் குமார் ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜிநாமா!

ADVERTISEMENT
ADVERTISEMENT