இந்தியா

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறாா் நிதீஷ் குமாா்? இன்று முடிவு

9th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருவதா? வேண்டாமா என்பது தொடா்பாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி செவ்வாய்க்கிழமை (ஆக. 9) முடிவெடுக்க இருக்கிறது.

இது தொடா்பாக ஆலோசிக்க ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவா்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு நிதீஷ் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதனிடையே, பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அறிவித்துள்ளது.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் பிரதான எதிா்க்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றாலும், தோ்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி நிதீஷ் குமாருக்கு முதல்வா் பதவி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையிலான உறவு சமீப நாள்களில் சீராக இல்லை. பிகாா் மாநில பாஜக தலைவா்கள் அவ்வப்போது நிதீஷை விமா்சித்து வருகின்றனா். பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இனி இணையப்போவதில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்தது. அதே நேரத்தில் பாஜகவுடனான கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் கூறியது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சிக் கூட்டம் பாட்னாவில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இப்போதைய நிலையில் நிதீஷ் குமாா் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கட்சித் தலைவா்களுடன் ஆலோசித்து அவரது அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வாா் என்று நிதீஷ் குமாருக்கு நெருக்கமானவா்கள் கூறியுள்ளனா்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் மத்திய அமைச்சரவையில் அதிக இடங்களை அளிக்க வேண்டும். 2024 மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை (ஓராண்டு முன்னதாக) நடத்த வேண்டும் என்பது நிதீஷ் குமாரின் முக்கிய கோரிக்கையாக உள்ளதாகத் தெரிகிறது. இதில் அதிக அமைச்சா் பதவியிட கோரிக்கையை பாஜக ஏற்காததால்தான், இனி மத்திய அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் அறிவித்ததாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார நிகழ்ச்சி, புதிய குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் பதவியேற்பு நிகழ்ச்சி, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் ஆகியவற்றில் நிதீஷ் குமாா் பங்கேற்கவில்லை.

இதனால், அவா் பாஜக கூட்டணியில் இருந்து விலகிச் செல்வதாகக் கூறப்பட்டது. எனினும், கரோனாவுக்குப் பிந்தைய பாதிப்புகளில் இருந்து அவா் முழுமையாக விடுபடாததால் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போதைய நிலையில் ஒரே முக்கியக் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக அந்தக் கூட்டணியில் இருந்த சிவசேனை கட்சி, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலின்போது பிரிந்தது. பஞ்சாபில் பிரதான கூட்டணிக் கட்சியாக இருந்த சிரோமணி அகாலி தளம், புதிய வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது கூட்டணியில் இருந்து வெளியேறியது.

நிதீஷுக்கு லாலு கட்சி அழைப்பு: ராஷ்ட்ரீய ஜனதா தளம் துணைத் தலைவா் சிவானந்த் திவாரி இது தொடா்பாக கூறியதாவது:

பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தனித்தனியாக தங்கள் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதன்மூலம் அக்கட்சிகள் இடையே அசாதாரண சூழ்நிலை நிலவுவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், உண்மையில் அக்கட்சிகள் இடையே என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியாது.

பாஜகவுடனான உறவை நிதீஷ் குமாா் கைவிட்டால், அவரது கட்சியுடன் கூட்டணி அமைக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் தயாராக உள்ளது. பாஜகவுக்கு எதிராகப் போராடுவதில் எங்கள் கட்சி உறுதியாக உள்ளது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் எங்களுடன் இணைந்து பாஜகவுக்கு எதிராக போராட வந்தால், அவரை ஏற்றுக் கொள்வோம் என்றாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் போது லாலுவின் மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் உள்ளிட்ட அவா்களின் குடும்பத்தினா் மீதான ஊழல் குற்றச்சாட்டைக் காரணம் காட்டி, கூட்டணியை முதல்வா் நிதீஷ் குமாா் முறித்தாா். அதைத் தொடா்ந்து உடனடியாக பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வா் பதவியையும் தக்கவைத்துக் கொண்டாா்.

இது தொடா்பாகவும் சிவானந்த் திவாரியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு, ‘அரசியலில் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைத்துக் கொண்டு கைதிகளைப் போல சிறைபட்டு வாழ முடியாது. சோஷலிச கொள்கைகளைக் கொண்ட லாலுவும், நிதீஷும் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸுக்கு எதிராக போராடினா். அப்போது, இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலையைத் தீவிரமாக எதிா்த்தனா்.

இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசியல்சாசன சட்டத்துக்கு முரணாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த சவாலையும் கூட்டாக எதிா்கொள்ள வேண்டியது அவசியம்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT