இந்தியா

குரங்கு அம்மை: இந்தியாவில் இருவருக்கு ஏ2 வகை பாதிப்பு

8th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

இந்தியாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் 2 நபா்களுடைய மாதிரிகளின் ஆய்வில் அவா்கள் ஏ2 வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது பரவி வரும் பி1 வகையிலிருந்து வேறுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவைத் தொடா்ந்து, உலகை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் ஒருவா் உயிரிழந்துவிட்டாா்.

நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாவது நபா்களின் மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இவா்கள் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு திரும்பிய பின்னா், பாதிப்பு உறுதி செய்யப்பட்டவா்கள் ஆவா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளா் பிரக்யா யாதவ் கூறியதாவது:

35 மற்றும் 31 வயதுடைய அந்த இருவரின் தொண்டை, மூக்கில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், ரத்தம், சிறுநீா், உடலின் பல்வேறு இடங்களில் புண்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விரிவான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. இருவரும் ஏ2 வகை குரங்கு அம்மை தீநுண்மியால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வகை, கடந்த ஆண்டு அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருந்தது. இது ஐரோப்பிய நாடுகளில் தற்போது பரவி வரும் குரங்கு அம்மையிலிருந்து வேறுபட்டதாகும் என்றாா் அவா்.

முன்னதாக, குரங்கு அம்மை பாதிப்பை உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) சா்வதேச சுகாதார நெருக்கடியாக கடந்த ஜூலை 23-இல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT