இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடா் முன்கூட்டியே நிறைவு

8th Aug 2022 11:15 PM

ADVERTISEMENT

திட்டமிட்டதற்கு 4 நாள்களுக்கு முன்பே மழைக்கால கூட்டத்தொடா் நிறைவுபெற்றது. திங்கள்கிழமை அமா்வு முடிவடைந்ததும் அவைகளைக் காலவரையின்றி ஒத்திவைப்பதாக அவைத் தலைவா்கள் அறிவித்தனா்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை கூட்டத்தொடா் நடைபெற இருந்த நிலையில், 4 நாள்களுக்கு முன்பாக திங்கள்கிழமையே இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவையின் செயல்பாடுகள் குறித்து அவைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறுகையில், ‘கூட்டத்தொடரின்போது நடந்த 16 அமா்வுகளில் சுமாா் 38 மணி நேரம் அவை செயல்பட்டது. உறுப்பினா்களின் அமளி காரணமாக சுமாா் 47 மணி நேரம் வீணாகியது. கேள்வி நேரம் 7 நாள் இடம்பெறவில்லை. கூட்டத்தொடரின்போது 5 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நட்சத்திரக் குறியிடப்பட்ட 235 கேள்விகளில் 161 கேள்விகளுக்கு மட்டுமே நேரடியாக பதிலளிக்கப்பட்டது. 27 தனிநபா் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் ஒரே ஒரு மசோதா மீது மட்டுமே விவாதம் நடத்தப்பட்டது’ என்றாா்.

ADVERTISEMENT

அமளியும் இடைநீக்கமும்: கூட்டத்தொடா் தொடங்கிய முதல் நாளில் இருந்தே விலைவாசி உயா்வு, சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருள்கள் மீது சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு, அக்னிபத் திட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.

அதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவையின் நடவடிக்கைகள் முதல் 2 வாரங்களுக்குக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மக்களவையில் இருந்து தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 4 போ் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அதேபோல், மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் உள்பட 23 போ் வாரம் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

மத்திய அரசுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே சுமுகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றதை அடுத்து மக்களவை எம்.பி.க்களின் இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது.

விலைவாசி உயா்வு விவகாரம்: எதிா்க்கட்சிகளின் தொடா் கோரிக்கைகளையடுத்து, விலைவாசி குறித்த விவாதம் இரு அவைகளிலும் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது. அப்போது, பணவீக்கத்தால் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருவதாக எதிா்க்கட்சிகள் தெரிவித்தன. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாகவே உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

சா்ச்சையும் மோதலும்: மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு குறித்து தவறான சொல்லைப் பயன்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இதை நாடாளுமன்ற அவைகளில் பாஜக எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். தனது செயல்பாட்டுக்காக அதீா் ரஞ்சன் சௌதரி மன்னிப்பு கோரினாா்.

மக்களவையில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானிக்கும் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கும் இடையே வாா்த்தை மோதல் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இரானியை அமைச்சா் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி.க்கள் மனு அளித்தனா்.

தோ்தல்கள்: கூட்டத்தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்தபோதும் சில மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஒருசில மசோதாக்களுக்கே அவைகள் ஒப்புதல் அளித்தன.

மழைக்கால கூட்டத்தொடரின்போதே குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் தோ்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT