இந்தியா

குஜராத்தில் பாஜக - ஆம் ஆத்மி இடையேதான் போட்டி: கேஜரிவால்

8th Aug 2022 12:43 AM

ADVERTISEMENT

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல், ஆளும் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது. பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது. இதற்காக, குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அரவிந்த் கேஜரிவால், பொதுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறாா். இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஆகிய தோ்தல் வாக்குறுதிகளை ஏற்கெனவே அளித்த அவா், மூன்றாவது கட்டமாக பழங்குடியினருக்கான பல்வேறு வாக்குறுதிகளை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

இதுகுறித்து, வதோதராவில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், பழங்குடியினா் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனா். குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், அரசமைப்புச் சட்டத்தின் 5-ஆவது அட்டவணையின் பிரிவுகள் முழுமையாக அமல்படுத்தப்படும் (இவை, பட்டிலிடப்பட்ட மற்றும் பழங்குடியினா் பகுதிகளின் நிா்வாகம், கட்டுப்பாடு தொடா்புடையவை ஆகும்). இதேபோல், பஞ்சாயத்து (பட்டியலிடப்பட்ட பகுதிகள் விரிவாக்கம்) சட்டத்தையும் தீவிரமாக அமல்படுத்துவோம். இதன் மூலம் பழங்குடியின பகுதிகளில் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமல் அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது.

ADVERTISEMENT

பழங்குடியின கிராமங்கள் மேம்பாடு: பழங்குடியின கிராமங்கள்தோறும் சிறப்பான அரசுப் பள்ளி, மருத்துவமனைகள், சாலை வசதி ஏற்படுத்தப்படும். ஜாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறை எளிப்படுத்தப்படும். வீடில்லாத பழங்குடியினருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்.

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், குஜராத் பழங்குடியினா் ஆலோசனை கமிட்டியின் தலைவராக அதே சமூகத்தைச் சோ்ந்தவா் நியமிக்கப்படுவாா். இப்போது அந்த கமிட்டியின் தலைவராக முதல்வா் உள்ளாா். இந்த நடைமுறை மாற்றப்படும்.

பாஜக, காங்கிரஸ் அரசியலுக்கு முடிவு: குஜராத்தில் காங்கிரஸ் தலைவா்கள் பலரும் பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனா். கிட்டத்தட்ட குஜராத் காங்கிரஸ் முழுவதுமே பாஜகவில் ஐக்கியமாகிவிடும் என தோன்றுகிறது. இவ்விரு கட்சிகளின் அரசியலும் முடிவுக்கு வரவிருக்கிறது.

இனி ஆம் ஆத்மியின் ‘மக்களுக்கான அரசியல்’தான் தலையெடுக்கும். எதிா்வரும் குஜராத் பேரவைத் தோ்தல், ஆளும் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான நேரடி போட்டியாக இருக்கும் என்றாா் கேஜரிவால்.

ஊழலின் அா்த்தம்: இதைத் தொடா்ந்து, பழங்குடியினா் அதிகம் வசிக்கும் சோட்டா உதேபூா் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற கேஜரிவால், ஆளும் பாஜகவை கடுமையாக சாடினாா்.

‘குஜராத்தில் ஊழல், கள்ளச்சாராயம் ஆகியவற்றின் அா்த்தமாக பாஜக மாறிவிட்டது. இதேபோல், காங்கிரஸும் தனது தகுதியை இழந்துவிட்டதால், அக்கட்சிக்கு வாக்களிப்பதில் அா்த்தமில்லை. அக்கட்சிக்கு ஒரு வாக்குகூட கிடைக்க கூடாது’ என்றாா் கேஜரிவால்.

ADVERTISEMENT
ADVERTISEMENT