இந்தியா

மாவட்டவாரியாக சிறுபான்மையினரை அடையாளம் காண்பது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம்

8th Aug 2022 11:22 PM

ADVERTISEMENT

மாவட்ட வாரியாக சிறுபான்மையினரை அடையாளம் காண்பது சட்டத்துக்கு எதிரானது என்றும், மத, மொழிவாரியான சிறுபான்மையினரை மாநில வாரியாக மட்டுமே அடையாளம் காண முடியும் என்றும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவை சோ்ந்த தேவகிநந்தன் தாக்குா் என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கடந்த 1993 அக்டோபா் 23-இல் வெளியிட்ட அறிவிக்கையில் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், பெளத்தம், பாா்சி ஆகிய 5 மதங்களை சிறுபான்மை மதம் என தன்னிச்சையாக வரையறை செய்தது.

ஆனால் லடாக், மிஸோரம், லட்சத்தீவு, காஷ்மீா், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் சிறுபான்மையினத்தவரான யூத மதம், பஹாய் மதம், ஹிந்துக்கள் மாநில அளவில் தாங்கள் சிறுபான்மையினராக அடையாளம் காணப்படாததால், தங்களது விருப்பப்படி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியவில்லை.

ADVERTISEMENT

இது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுப்பதால், இதற்கு வழிவகை செய்யும் தேசிய சிறுபான்மையின ஆணைய சட்டத்தின் 2 (சி) பிரிவை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட வாரியாக சிறுபான்மையினரை அடையாளம் காண வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த மனு நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ஆா்.பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், மத ரீதியிலும், மொழி வாரியாகவும் சிறுபான்மையினத்தவரை மாநிலவாரியாக மட்டுமே அடையாளம் காண முடியுமே தவிர, மாவட்ட வாரியாக அல்ல என்று கூறியதுடன், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என நிராகரித்தனா்.

பின்னா், நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சோ்த்து இந்த மனுவை செப்டம்பா் முதல் வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT