இந்தியா

சஞ்சய் ரௌத் வழக்கு: மும்பையில் அமலாக்கத் துறை சோதனை

2nd Aug 2022 01:13 PM

ADVERTISEMENT

 

சஞ்சய் ரௌத் மீதான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடர்பாக மும்பையில் 2 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்புத் திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், சஞ்சய் ரெளத், அவரது மனைவி உள்ளிட்டோா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரிக்கப்படுகின்றன.

இதுதொடா்பான வழக்கில் சஞ்சய் ரெளத் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டாா். 

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் சஞ்சய் ரெளத்தும் அவரது குடும்பத்தினரும் நேரடியாக பலனடைந்தவா்கள் என்பதால் அவா்களிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா் ஹில்டன் வேணிகோன்காா் வாதிட்டாா்.

அதேசமயம், சஞ்சய் ரெளத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை; அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டவை என்றாா்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, எம்.ஜி.தேஷ்பாண்டே, சஞ்சய் ரெளத்தை காவலில் வைத்து விசாரிக்கப் போதுமான அடிப்படை இருப்பதாகக் கூறி, அவரை ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலுக்கு அனுப்பி உத்தரவிட்டாா்.

முன்னதாக, சஞ்சய் ரெளத்தின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் சோதனை மேற்கொண்டனா். இதைத் தொடா்ந்து, அவரை அமலாக்கத் துறை அலுவலகம் அழைத்துச் சென்று அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி, நள்ளிரவு கைது செய்தனா்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக மும்பையின் 2 இடங்களில் அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், இவ்வழக்கு தொடர்பாக மேலும் சிலருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT