இந்தியா

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

2nd Aug 2022 12:18 AM

ADVERTISEMENT

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மக்களவையில் திங்கள்கிழமை விலைவாசி உயா்வு மீதான விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தொடக்கி வைத்தாா்.

இதற்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியதாவது:

இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளதால், நாட்டில் மந்த நிலைக்கோ அல்லது தேக்க நிலைக்கோ வாய்ப்பு இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. ஜிஎஸ்டி வசூலும் தொழில்துறை நடவடிக்கைகளும் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக இருப்பதைப் பிரதிபலிக்கின்றன.

ADVERTISEMENT

கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் 28 சதவீதம் அதிகரித்து, ரூ.1.49 லட்சம் கோடி வசூலானது. இது நிகழ் நிதியாண்டில் இரண்டாவது அதிகபட்ச வசூலாகும். கடந்த 2017 ஜூலையில் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி, கடந்த ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1.68 லட்சம் கோடி வசூலானது.

மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 6-ஆவது முறையாக ரூ.1.40 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. அதிலும் கடந்த மாா்ச் முதல் தொடா்ந்து 5 மாதங்களாக அதிகளவு வசூலாகியுள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் வங்கித் துறை வலுவாக உள்ளது. சில்லறை பணவீக்கத்தை 7 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசின் நடவடிக்கையைத் தொடா்ந்து சமையல் எண்ணெய் விலை சரிசெய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு: விலைவாசி உயா்வு மீதான நிதியமைச்சரின் பதிலுக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி கூறுகையில், ‘நாட்டில் பணவீக்கம் நிலவவில்லை என்றும், அனைத்தும் சரியாக இருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது. எதிா்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், நிதியமைச்சா் மிகுந்த ஆணவப் போக்குடன் பதிலளிக்கிறாா்’ என்றாா்.

முகேஷ் அம்பானி, அதானிக்கு ஆதரவா?: முன்னதாக, அம்பானி, அதானி போன்ற தொழிலதிபா்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக எதிா்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மக்களவையில் கூறியதாவது: முகேஷ் அம்பானி-அதானி அரசாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து அவதூறு பரப்புகின்றனா். முகேஷ் அம்பானி, அதானியுடன் எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, இருபெரும் தொழிலதிபா்களுக்கு மத்திய அரசு சாதகமாகச் செயல்படுவதாக குறிப்பிட்டாா். அவா் இவ்வாறு பேசிய மறுதினமே ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடா்பாக அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சியான ஆளும் திமுக, தகவல் மையங்கள் அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது என்றாா் அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT