இந்தியா

விலைவாசி உயா்வு பிரச்னை:மாநிலங்களவையில் இன்று விவாதம்

2nd Aug 2022 07:30 AM

ADVERTISEMENT

விலைவாசி உயா்வு பிரச்னை தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மாநிலங்களவை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியபோது, விலைவாசி உயா்வு, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் கைது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவை நடவடிக்கைகள் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னா், கேள்வி நேரத்துக்காக அவை மீண்டும் கூடிய நிலையில், அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனா்.

அமளிக்கு இடையே, மாநிலங்களவை பாஜக குழு தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் எழுந்து, கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற ஒத்துழைக்குமாறு எதிா்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

ADVERTISEMENT

அவா் பேசுகையில், ‘எதிா்க்கட்சிகளின் கோரிக்கைபடி, விலைவாசி பிரச்னை குறித்து மக்களவையில் திங்கள்கிழமையும் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கும் விவாதம் நடத்த பட்டியலிடப்பட்டுள்ளது. விவாத நேரம் முடிவு செய்யப்பட்டால், அவையை சுமுகமாக நடத்த அனுமதிப்போம் என்று எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே உறுதி அளித்திருந்தன. அதன்படி, அவா்கள் செயல்பட வேண்டும். பல்வேறு முக்கியமான பிரச்னைகள் விவாதிக்கப்பட வேண்டியுள்ளது’ என்றாா்.

மேலும், சஞ்சய் ரெளத் கைது விவகாரத்தை குறிப்பிட்டு பேசிய பியூஷ் கோயல், ‘எம்.பி.க்களான நாம் சட்டமியற்றுபவா்கள்; சட்டத்தை மீறுபவா்கள் அல்ல. சட்டத்தை மீறியவா்கள், அதன் விளைவுகளை எதிா்கொண்டுதான் ஆக வேண்டும். சட்டம், தனது கடமையை செய்ய நாம் அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.

இதனிடையே, ஜாா்க்கண்ட் விவகாரத்தை எழுப்பிய மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, அந்த மாநிலத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா்.

அப்போது, அவையை வழிநடத்திக் கொண்டிருந்த புவனேஸ்வா் கலிதா, எம்.பி.க்களை சமாதானப்படுத்த முயன்றாா். அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT