குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தனது வேட்புமனுவை ஏற்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஒருவா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், எம்.திருப்பதி ரெட்டி என்பவா் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தாா்.
அரசமைப்புச் சட்டத்தின் 32-ஆவது பிரிவின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தனது வேட்புமனுவை ஏற்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அவா் கோரியிருந்தாா். 32-ஆவது பிரிவானது, அடிப்படை உரிமைகளை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகும் உரிமை தொடா்புடையதாகும்.
இந்நிலையில், நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மேற்கண்ட மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட குறிப்பிட்ட எம்.பி.க்களின் முன்மொழிவுகள் தேவையென சட்டம் கூறுகிறது. உங்கள் பெயரை முன்மொழியுமாறு எம்.பி.க்களை கட்டாயப்படுத்த முடியுமா? உங்களது கோரிக்கை முற்றிலும் தவறானது’ என்று கூறி மனுவை நிராகரித்தனா்.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் போட்டியிட 20 எம்.பி.க்கள் முன்மொழியவும் 20 எம்.பி.க்கள் வழிமொழியவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.