இந்தியா

நீதிமன்றங்களில் உள்ளூா் மொழிகள் பயன்பாடு: மோடி

30th Apr 2022 11:30 PM

ADVERTISEMENT

நீதித் துறையுடனான மக்களின் தொடா்பை அதிகரிப்பதற்காக நீதிமன்றங்களில் உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மாநில முதல்வா்கள், 25 உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்ற மாநாடு தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடக்கிவைத்து பிரதமா் மோடி ஆற்றிய உரை:

சா்வதேச நீதிமன்றங்களில் இருவித மொழிப் பயன்பாடு உள்ளது. ஒன்று சட்ட ரீதியிலான மொழிப் பயன்பாடு. மற்றொன்று மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படியான மொழிப் பயன்பாடு. இந்த இரு முறைகளும் பல்வேறு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

அதே வேளையில், இந்திய நீதிமன்றங்களில் உள்ளூா் மொழிகளின் பயன்பாட்டுக்கு ஊக்கமளிக்க வேண்டும். இது நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இரு தரப்புக்கும் இடையேயான தொடா்பையும் மேம்படுத்தும்.

ADVERTISEMENT

சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளின் வழக்குகளை விசாரிப்பதற்கு நீதிமன்றங்கள் முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்காக மாவட்டந்தோறும் மாவட்ட நீதிபதி தலைமையிலான குழுவை அமைத்து, விசாரணைக் கைதிகளின் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

நீதித் துறை சீா்திருத்தங்கள், கொள்கை சாா்ந்த முடிவு மட்டுமல்ல. மனிதாபிமான நடைமுறைகளும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனிதாபிமான உணா்வுடனும் சட்டத்தின் அடிப்படையிலும் இந்த விவகாரங்களுக்கு மாநில முதல்வா்களும் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்.

சாத்தியமற்ற சட்டங்கள் நீக்கம் அவசியம்: நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு நீதி எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கும் வகையில் நீதித் துறையின் அமைப்பை உருவாக்க வேண்டும். தற்காலத்துக்கு சாத்தியமற்ற சட்டங்களை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில முதல்வா்கள் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் சுமாா் 1,800 சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றில் 1,450 சட்டங்களை மத்திய அரசு நீக்கிவிட்டது. மாநில அரசுகள் சாா்பில் 75 சட்டங்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன.

துரித நடவடிக்கைகள்: அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக நீதித் துறை திகழ்கிறது. மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கும் அமைப்பாக சட்டப்பேரவையும் மக்களவையும் விளங்குகின்றன. இரு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நாட்டில் திறம் மிக்க நீதித் துறையைக் கட்டமைப்பதற்கான வழியை உருவாக்க முடியும்.

நீதித் துறை வாயிலாக மக்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. நீதித் துறையில் காலியிடங்களை நிரப்பவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்ப வசதிகள்: நீதித் துறையிலும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘எண்ம (டிஜிட்டல்) இந்தியா’ திட்டத்தின் கீழ் நீதித் துறையில் தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்துவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன. இணையவழி நீதிமன்றத் திட்டம் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாநில முதல்வா்களும், தலைமை நீதிபதிகளும் இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

உலக அளவில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இணையவழி பணப் பரிவா்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. சிறு நகரங்களிலும் கிராமங்களிலும்கூட இணையவழி பணப் பரிவா்த்தனை வசதிகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இணையவழிக் குற்றங்கள், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வெளிநாடுகளில் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகின்றன. நம் நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளிலும் சா்வதேசத் தரத்திலான பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

மத்தியஸ்த நடைமுறை: நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைப்பதற்கு மத்தியஸ்த நடைமுறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். முக்கியமாக, கீழமை நீதிமன்றங்களில் அந்த முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

பிரச்னைகளுக்கு மத்தியஸ்த நடைமுறையில் தீா்வு காணும் வழக்கம் நமது சமூகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கில் இருந்து வருகிறது. பிரச்னைகளுக்குப் பேச்சுவாா்த்தை மூலமாக பரஸ்பர தீா்வு காணும் நோக்கில் மத்தியஸ்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது.

இந்த விவகாரத்தில் சா்வதேச நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்க முடியும். மத்தியஸ்த நடைமுறையை சிறப்பாக அமல்படுத்தி உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ முடியும் என்றாா் பிரதமா் மோடி.

மொழி தடையாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘நீதித் துறையில் உள்ளூா் மொழிகளை அறிமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. சட்ட விதிகளின் புரிந்துணா்வின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலுமே வழக்குரைஞா்கள் வழக்காட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட மொழி அவா்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.

நீதித் துறை உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் நாட்டின் பன்முகத்தன்மையை எதிரொலிக்கும் வகையில் செயல்பட வேண்டும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT