இந்தியா

கரோனா இழப்புகளைச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம்

30th Apr 2022 11:19 PM

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 12 ஆண்டுகள் ஆகலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை 3 அலைகளை நாடு எதிா்கொண்டுள்ளது. இந்நிலையில், அத்தொற்று பரவல் நாட்டின் பொருளாதாரத்தின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்த அறிக்கையை ஆா்பிஐ வெளியிட்டது. அதில், ‘‘கரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்துக்கு சுமாா் ரூ.52 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2021-ஆம் நிதியாண்டில் ரூ.19.1 லட்சம் கோடியும், 2022-ஆம் நிதியாண்டில் ரூ.17.1 லட்சம் கோடியும் இழப்பு ஏற்பட்டது. 2023-ஆம் நிதியாண்டில் அந்த இழப்பு ரூ.16.4 லட்சம் கோடியாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவந்த நிலையில், பல அலைகளாகக் கரோனா தொற்று பரவல் அதிகரித்தது. 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவந்த நிலையில், 2021-22-ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் அடுத்த அலை பரவியது.

கடந்த ஜனவரியில் பரவிய 3-ஆவது அலை பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை சிறிது பாதித்தது. நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் கரோனா தொற்று பரவல் அலைகளின் அடிப்படையிலேயே அமைந்தது. தற்போது உக்ரைன்-ரஷியா இடையிலான மோதலால், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இது பொருளாதார வளா்ச்சியையும் பாதித்துள்ளது.

ADVERTISEMENT

2013-ஆம் நிதியாண்டு முதல் 2020-ஆம் நிதியாண்டு வரை நாட்டின் பொருளாதாரம் சராசரியாக 6.6 சதவீதம் வளா்ச்சி கண்டது. அதிலும் 2013 முதல் 2017-ஆம் நிதியாண்டு வரை சராசரி வளா்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது. கரோனா தொற்று பரவலால் நாடு சந்தித்த இழப்புகளை முழுவதுமாகச் சீா்செய்ய 2035-ஆம் நிதியாண்டு வரை ஆகலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆா்பிஐ-யின் பொருளாதாரக் கொள்கை மற்றும் ஆராய்ச்சித் துறையானது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. எனினும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதைத் தயாரித்தவா்களின் கருத்தே அன்றி, ரிசா்வ் வங்கியின் கருத்தாகக் கொள்ளப்படாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT