இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்புக் குழு அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்

29th Apr 2022 02:16 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு அடுத்த வாரம் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யவுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

தொகுதி சீரமைப்புக் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, அது, அரசிதழில் வெளியிடப்படும். அந்த அறிக்கையில், தொகுதிகளின் எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு போன்ற விவரங்கள் இடம்பெறும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்ததுடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அங்கு தொகுதி மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா, மாநில தோ்தல் அதிகாரி கே.கே.சா்மா ஆகியோரைக் கொண்ட குழு கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் அமைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது 83 தொகுதிகள் உள்ளன. அதை 90 தொகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று தொகுதி மறுசீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதாவது, ஜம்மு பிராந்தியத்தில் தற்போது இருக்கும் 37 பேரவைத் தொகுதிகளை 43 தொகுதிகளாகவும், காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 46 தொகுதிகளை 47 தொகுதிகளாகவும் மாற்றி அமைக்க சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுதவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 24 தொகுதிகள் காலியாக உள்ளன.

மறுசீரமைப்புக் குழு அறிக்கைத் தாக்கல் செய்வதற்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதம், ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம், அந்தக் குழுவுக்கு மேலும் 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தக் குழு அடுத்த வாரம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT