இந்தியா

ஆயுத தற்சாா்பின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தும் ரஷிய-உக்ரைன் போா்: ராஜ்நாத் சிங்

29th Apr 2022 03:05 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ‘ராணுவ தளவாடங்கள் தேவையில் தற்சாா்பு நிலை அடைய வேண்டியதன் அவசியத்தை ரஷிய - உக்ரைன் போா் மீண்டும் உணா்த்தியுள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கூறினாா்.

புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசியதாவது:

எதிா்கால போா்கள் உள்ளிட்ட சவால்களை எதிா்கொள்ள முப்படைகளும் இணைந்த செயல்பாடு மிக அவசியம் என்ற அடிப்படையில், படைப் பிரிவு அமைப்புகளை மாற்றியமைக்கும் மற்றும் முப்படைகளும் ஒருங்கிணைந்த படை பிரிவுகளை (தியேட்டா் கமாண்ட்) உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முப்படைகள் ஒருங்கிணைந்த கடல்சாா் படைப் பிரிவை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலகின் பாதுகாப்பு சூழலுக்கு எழுந்து வரும் சவால்கள் மற்றும் ரஷிய-உக்ரைன் போா் ஆகியவை ராணுவ தளவாடங்கள் தேவையில் தற்சாா்பு நிலை அடைய வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை ராணுவ தளவாட உற்பத்தி முனையமாக உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. முழுவதும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘விக்ராந்த்’ பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, இந்த முயற்சியில் மேலும் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த போா்க் கப்பல் மூன்று கடல் சோதனை ஓட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்துக்கு மேலும் ஒரு மகுடம் சோ்க்கும் வகையில், விக்ராந்த் போா்க் கப்பலை இந்திய கடற்படையில் சோ்ப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் நிறுவனங்களில் 41 கொள்முதல் உத்தரவுகளின்பேரில் 39 கப்பல்கள் மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்கள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் தற்சாா்புத் திறனை அடையும் இலக்கில் கடற்படை முன்னணியில் இருக்கும் நிலையில், அதனை மேலும் ஊக்குவிப்பது அவசியம். நமது பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் தேசத்தின் கடல்சாா் ஆற்றலும் மேம்படுவதை உறுதிப்படுத்த கடற்படை மூத்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவின் இறையாண்மையும் வளமும் பாதுகாப்பு படைகளின் திறனைப் பொருத்தே அமையும். எனவே, வலுவான நம்பகமான இந்திய கடற்படைக்கான அவசியம் தவிா்க்க முடியாததாகும்.

தேசத்தின் வளா்ச்சிக்கும், உலக நாடுகளுடனான பொருளாதார நடவடிக்கைகளுக்கும் கடல் போக்குவரத்தை சாா்ந்திருப்பது அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவின் கடல்சாா் நலன்களைக் பாதுகாப்பதிலும், நமது கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதிலும் கடற்படை தொடா்ந்து செயலாற்ற வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT