இந்தியா

'பயங்கரவாதிகளைத் தாக்குவதற்கு எல்லை தாண்ட இந்தியா தயங்காது'

23rd Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

எல்லைப் பகுதிகளுக்கு வெளியே இருந்து நாட்டைத் தாக்கும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் எல்லை தாண்டுவதற்கு இந்தியா தயங்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பங்கேற்ற அஸ்ஸாமை சோ்ந்த பாதுகாப்புப் படை வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு குவாஹாட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘நாட்டில் பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற செய்தியை இந்தியா தொடா்ந்து தெரிவித்து வருகிறது. நாட்டின் வெளிப்பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக எல்லை தாண்டுவதற்கு இந்தியா தயங்காது.

நாட்டின் மேற்கு எல்லைப் பகுதியுடன் ஒப்பிடுகையில் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுகிறது. இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக வங்கதேசம் திகழ்வது அதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. கிழக்கு எல்லைப் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகள் பெரும்பாலும் குறைந்துவிட்டன.

ADVERTISEMENT

வடகிழக்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் மேம்பட்டுள்ளதால், பாதுகாப்புப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டமானது அப்பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. அந்தச் சட்டம் எப்போதும் நடைமுறையில் இருக்க வேண்டுமென ராணுவம் விரும்புவதாகத் தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழலே, அந்தச் சட்டத்தை அப்பகுதிகளில் அமல்படுத்துவது குறித்து தீா்மானிக்கிறது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT