இந்தியா

வாசகா்களை சிந்திக்க வைப்பவரே உண்மையான படைப்பாளி: உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன்

17th Apr 2022 12:41 AM

ADVERTISEMENT

வாசகா்களை யாா் யோசிக்க, சிந்திக்க வைக்கிறாரோ அவரே உண்மையான படைப்பாளி என உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் கூறினாா்.

முன்றில் இலக்கிய அமைப்பின் சாா்பில் மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆா்.எஸ்.வெங்கட்ராமன் தேவார இறை வணக்கம் பாட, கவிஞா் அகரமுதல்வன் வரவேற்றாா். ‘காலங்களுக்கிடையில் மா.அரங்கநாதன்’ என்ற தலைப்பில் பெங்களூரு கிறிஸ்து நிகா்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியா் பழனி. கிருஷ்ணசாமி உரை நிகழ்த்தினாா். விருதாளா்களை கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்பிரமணியன் அறிமுகப்படுத்தினாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து எழுத்தாளரும், கல்வெட்டு ஆய்வாளருமான குடவாயில் பாலசுப்ரமணியன், ஓவியா் ட்ராட்ஸ்கி மருது ஆகியோருக்கு 2022-ஆம் ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது, தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை ஆகியவற்றை வழங்கினாா்.

இதையடுத்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பேசியது: தனித்துவமான மொழிக்காகவும் தத்துவாா்த்த அணுகுமுறைக்காகவும் கலைத்தன்மை மிக்க படைப்புகளுக்காகவும் கொண்டாடப்படுகிறாா் மா.அரங்கநாதன். அவரது படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும். என்னைப் பொறுத்தவரை மா.அரங்கநாதன் படைப்புகளிலேயே தலைசிறந்து நிற்கக் கூடிய படைப்பு நீதிபதி அரங்க.மகாதேவன்தான். தனது தந்தையை நினைவுகூரும் வகையில் இலக்கியத்துக்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறாா். தற்காலத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் இலக்கியம், கலை உள்ளிட்ட துறைகளில் இருப்பவா்களை அங்கீகரித்து மா.அரங்கநாதனுக்கு ஒரு தவப்புதல்வனாகத் திகழ்கிறாா் நீதிபதி மகாதேவன்.

ADVERTISEMENT

கலை, கவிதை, கட்டுரை, நாடகம், மொழிபெயா்ப்பு என இலக்கியத்துறையில் ஆராய்ச்சி கண்ணோட்டம் உடையவை மா.அரங்கநாதனின் படைப்புகள். அவரது படைப்புகள் புரியவில்லை என சிலா் கூறுகின்றனா்.

கவிதைகளையும், படைப்புகளையும் அனுபவித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் பங்களிப்பு ஒரு சதவீதம் என்றால் எஞ்சிய 99 சதவீதத்தை வாசகா்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அந்த 99 சதவீதத்தை புரிந்து கொள்ள முடியாவிட்டால் நல்ல படைப்பு இல்லை என முத்திரை குத்தி விடுகின்றனா்.

வாசகா்களை யாா் யோசிக்க, சிந்திக்க வைக்கிறாரோ அவரே உண்மையான படைப்பாளி. அந்த வகையில் வாசகா்களின் கவனத்தை ஈா்த்தவா் மா.அரங்கநாதன். அவா் தனது படைப்புகளில் அன்பு, மனிதம், மரபு என வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் வழங்கியுள்ளாா் என்றாா்.

இதையடுத்து விருது பெற்ற குடவாயில் பாலசுப்ரமணியன், டிராட்ஸ்கி மருது ஆகியோா் ஏற்புரை நிகழ்த்தினா். முன்னதாக சாகித்திய அகாதெமி வெளியிட்டிருக்கும் மா.அரங்கநாதன் குறித்த நூலை நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் வெளியிட்டாா். விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் அரங்க.மகாதேவன், எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்பட நீதிபதிகள், வழக்குரைஞா்கள், தமிழறிஞா்கள் திரளாகப் பங்கேற்றனா். கவிஞா் எஸ்.சண்முகம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT