இந்தியா

இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை சாதனம்: ரஷிய விநியோகம் மீண்டும் தொடக்கம்

16th Apr 2022 01:51 AM

ADVERTISEMENT

எஸ்-400 ரக ஏவுகணை சாதனத்தின் இரண்டாவது தொகுதியை இந்தியாவிடம் ரஷியா வழங்கத் தொடங்கியுள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை சாதனங்களின் 5 தொகுதிகளை வாங்குவதற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 5 பில்லியன் டாலா்கள் (ரூ.38,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்தது.

இந்த ஏவுகணை சாதனங்களின் முதல் தொகுதியை கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்தது. வடக்கு செக்டாரில் சீனாவுடனான எல்லைப் பகுதிகள், பாகிஸ்தானுடனான எல்லை வரை தாக்கக்கூடிய விதத்தில் அந்தச் சாதனங்கள் ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால் எஸ்-400 ஏவுகணை சாதனத்தின் இதர தொகுதிகள் இந்தியாவுக்கு விநியோகிக்கப்படுவதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் பொருளாதாரத் தடைகள் எஸ்-400 ரக ஏவுகணை சாதன விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியாவுக்கான ரஷிய தூதா் டெனிஸ் அலிபோவ் உறுதிபடத் தெரிவித்திருந்தாா்.

ADVERTISEMENT

இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் இந்தியா வந்திருந்தபோது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்தும் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனுடனான போரால், எஸ்-400 ரக ஏவுகணை சாதனத்தின் இரண்டாவது தொகுதியை ரஷியா விநியோகிப்பதில் தாமதம் ஏற்படக் கூடும் என்று இந்தியா கவலை தெரிவித்து வந்தது.

அந்த விநியோகம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘எஸ்-400 ரக ஏவுகணை சாதனத்தின் இரண்டாவது தொகுதியில், அந்தச் சாதனத்தின் சில பாகங்களை இந்தியாவுக்கு ரஷியா விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து முக்கியப் பாகங்களும் வழங்கப்பட வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தன.

இந்தியாவுக்கு ராணுவத் தளவாடங்களை விநியோகிக்கும் முக்கிய நாடாக ரஷியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் திறன்

எஸ்-400 ரக ஏவுகணை சாதனத்தால் 600 கி.மீ. தொலைவில் உள்ள ஏராளமான இலக்குகளைக் கண்காணிக்க முடியும். அத்துடன் வெவ்வேறு தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க நான்கு விதமான ஏவுகணைகளையும் அந்தச் சாதனத்தால் செலுத்த முடியும். விமானம், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் இதர வான்வழித் தாக்குதல் விமானங்களை அந்தச் சாதனம் அழிக்க வல்லது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT