இந்தியா

10 ஆண்டுகளில் வரலாறு காணாத எண்ணிக்கையில் மருத்துவா்கள்

16th Apr 2022 01:56 AM

ADVERTISEMENT

 மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, அடுத்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத எண்ணிக்கையிலான மருத்துவா்களை நாடு பெறும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் 200 படுக்கைகள் கொண்ட கே.கே.படேல் பன்னோக்கு மருத்துவமனையை பிரதமா் மோடி காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். கட்ச் பகுதியில் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் பன்னோக்கு மருத்துவமனை அதுவாகும். உள்ளூா், வெளிநாட்டு நன்கொடையாளா்களின் நிதியுதவியின் மூலமாக அந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கின் வாயிலாக அனைவருக்கும் மருத்துவக் கல்வியைக் கொண்டு சென்றால், அடுத்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத எண்ணிக்கையிலான மருத்துவா்கள் நாட்டுக்குக் கிடைப்பாா்கள்.

குஜராத்தில் இரு தசாப்தங்களுக்கு முன்பாக 9 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. அவற்றில் சுமாா் 1,100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அத்தகைய சூழல் மாறியுள்ளது. மாநிலத்தில் தற்போது ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை-மருத்துவக் கல்லூரியும், 35-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.

ADVERTISEMENT

மாநிலத்தில் உள்ள மருத்துவ இடங்கள் சுமாா் 6,000-ஆக அதிகரித்துள்ளன. ராஜ்கோட்டில் உள்ள எய்ம்ஸில் கடந்த ஆண்டு முதல் 50 மாணவா்கள் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.

யோகம், ஆயுா்வேதம்: கரோனா தொற்று இன்னும் பரவி வருகிறது. எனவே, மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, ஆயுா்வேத மருத்துவ முறைகள் ஆகியவை கரோனா பரவல் காலத்தில் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றன. சா்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படவுள்ளது. அன்று அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோகப் பயிற்சி செய்யும் உலக சாதனை முயற்சியை கட்ச் மாவட்டம் மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பு: வெளிநாட்டு மக்கள் மஞ்சளின் பல்வேறு பலன்களை உணா்ந்துகொண்டதால், கரோனா பரவலுக்குப் பிறகு இந்தியாவின் மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியா்கள் வெளிநாட்டு மக்களை இந்தியாவுக்குச் சுற்றுலா செல்ல ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலமாக சுற்றுலாத் துறை வளா்ச்சி காணும். அத்துறையைச் சாா்ந்து வாழும் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகளை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குஜராத்தின் கட்ச் பகுதி வட இடமாக இருப்பதால், 75 பெரிய ஏரிகளை அமைப்பதற்கு அப்பகுதியைச் சோ்ந்த வெளிநாடுவாழ் இந்தியா்கள் நிதியுதவி வழங்க வேண்டும். இதன்மூலமாக மக்கள் சந்தித்து வரும் தண்ணீா்ப் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீா்வு காண முடியும்.

இடம்பெயர வேண்டாம்: கட்ச் பகுதியைச் சோ்ந்த மால்தாரி (கால்நடை வளா்ப்போா்) இன மக்கள் மழைக் காலம் முடிந்த பிறகு தீவனம் தேடி கால்நடைகளுடன் வேறு இடங்களுக்குக் குடிபெயா்வதை வழக்கமாக வைத்துள்ளனா். அவ்வாறு இடம்பெயா்வது குழந்தைகளின் கல்வியையும் பெருமளவில் பாதிக்கிறது. தற்போது கட்ச் பகுதிக்குப் போதிய நீா் கிடைத்து வருகிறது. எனவே, மால்தாரி இன மக்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயா்வதைக் கைவிட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

 

 

Tags : புஜ்
ADVERTISEMENT
ADVERTISEMENT