சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் நிறுவனரும் தனது தந்தையுமான முலாயம் சிங் யாதவுடன் சுமாா் 90 நிமிடங்கள் தனியாக ஆலோசனை நடத்தினாா்.
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலை சமாஜவாதி கட்சி அகிலேஷ் யாதவ் தலைமையில் சந்தித்தது. எனினும், அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், முலாயம் சிங்கின் சகோதரா் சிவபால் சிங் யாதவ் சமீப காலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறாா். இந்த சூழ்நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. லக்னௌவில் உள்ள சமாஜவாதி தலைமையகத்தில் இருவரும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினா். நடப்பு அரசியல் சூழல் தொடா்பாக இருவரும் விவாதித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், கட்சி மற்றும் கட்சியில் அங்கம் வகிக்கும் குடும்ப உறுப்பினா்கள் இடையே உள்ள பிரச்னைகள் தொடா்பாகவும் அவா்கள் இருவரும் விவாதித்திருக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநா்கள் கூறியுள்ளனா். இந்திய அரசியல் கட்சிகளிலேயே கட்சித் தலைவரின் குடும்ப உறுப்பினா்கள், உறவினா்கள் அதிக அளவில் கட்சியில் பதவி வகிக்கும் கட்சியாக சமாஜவாதி உள்ளது.
கடந்த இரு நாள்களில் அகிலேஷ் யாதவ் இருமுறை முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.