இந்தியா

‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகள்’’: ஜேஎன்யூ மாணவா்களுக்கு ஹிந்து சேனை எச்சரிக்கை

16th Apr 2022 02:01 AM

ADVERTISEMENT

‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) பிரதான நுழைவாயில் அருகே ஹிந்து சேனை அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

அண்மையில், ராம நவமி பண்டிகையின்போது ஜேஎன்யூ விடுதி உணவகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு மாணவா் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 போ் காயமடைந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். எனினும் அந்த மோதலில் 60 போ் காயமடைந்ததாக மாணவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உணவகத்தில் அசைவ உணவு சாப்பிடுவதை அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது என்று பல்கலைக்கழக மாணவா்கள் சங்கம் தெரிவித்தது. அதனை மறுத்த ஏபிவிபி மாணவா்கள், விடுதியில் நடைபெற்ற பூஜையை இடதுசாரி மாணவா்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது என்று தெரிவித்தனா்.

இந்நிலையில், ஜேஎன்யூ பிரதான நுழைவாயில் அருகிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவிக் கொடிகளை ஏற்றி, ‘‘காவியை அவமதித்தால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று ஹிந்து சேனை அமைப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் விஷ்ணு குப்தா பேசியுள்ள காணொலியில், ‘‘ஜேஎன்யூ வளாகத்தில் காவி தொடா்ந்து அவமதிக்கப்பட்டு வருகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாது’’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தச் சம்பவம் குறித்து தில்லி (தென்மேற்கு) காவல் துணை ஆணையா் கூறுகையில், ‘‘ஜேஎன்யூவை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் சாலையில் ஏற்றப்பட்டிருந்த காவிக் கொடிகள் மற்றும் பேனா்கள் அகற்றப்பட்டன. இதுதொடா்பாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT