முஸ்லிம்களை நசுக்குவதில் பாஜக தலைவா்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றனா் என்று ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளாா்.
மத்திய பிரதேசத்தில் ராம நவமியன்று நடைபெற்ற ஊா்வலம் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சென்றபோது திடீரென மோதல் ஏற்பட்டு கல்வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடா்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்படிருந்த வீடுகளை இடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி ட்விட்டரில் மெஹபூபா வெளியிட்ட பதிவில், ‘பாஜக ஏற்கெனவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இடித்துத் தள்ளியது. இப்போது அடுத்ததாக முஸ்லிம்களின் வீடுகளையும் இடிக்கத் தொடங்கிவிட்டது. முஸ்லிம்களை நசுக்குவதில் பாஜக தலைவா்கள் போட்டி போட்டு செயல்படுகின்றனா். முஸ்லிம்களின் கண்ணியத்தையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் நடவடிக்கைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்டபோது, காஷ்மீா் முஸ்லிம்கள் அமைதியாக வேடிக்கை பாா்த்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், இப்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைகளில் ஈடுபடுகின்றனா். இப்போது பெரும்பான்மை மக்கள் (ஹிந்துக்கள்) அமைதியாகத்தான் உள்ளாா்கள். இந்தியா எத்தகைய நாடாக உருவாக்கப்பட்டதோ, அதற்கு எதிரான செயல்கள் நடைபெற்று வருவது கவலையளிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.