புது தில்லி: உள்ளாட்சி அமைப்புகளின் நீடித்த வளா்ச்சிக்காக புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்துக்கு ரூ.5,911 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களா்களிடம் விவரித்தாா். அவா் கூறியதாவது:
புதுப்பிக்கப்பட்ட தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தை நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 2.78 லட்சம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில், நீடித்த வளா்ச்சி இலக்குகளை அடைவதற்கான நிா்வாகத் திறன்களை மேம்படுத்துவதற்கு இத்திட்டம் உதவும். இந்தத் திட்டம், ரூ.5,911 கோடியில் செயல்படுத்தப்படும். இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,700 கோடியாகவும், மாநில அரசின் பங்களிப்பு ரூ.2,211 கோடியாகவும் இருக்கும். இத்திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1.36 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா் அவா்.
இந்தத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் வறுமை இல்லாத மேம்பட்ட வாழ்வாதாரம், சுகாதாரம், குழந்தைகள் வளா்வதற்கு உகந்த சூழல், போதிய தண்ணீா் வசதி, தூய்மையான, பசுமையான கிராமம், உள்கட்டமைப்பு வசதியில் தன்னிறைவு பெற்ற கிராமம், சமூக ரீதியில் பாதுகாக்கப்பட்ட கிராமம், நல்ஆளுகை கொண்ட கிராமம், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான கிராமம் ஆகிய 9 இலக்குகள் எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் சில ஒப்பந்தங்களுக்கும், கொள்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
செபி-கனடா நிறுவனம் இடையே ஒப்பந்தம்: இந்தியப் பங்கு, பரிவா்த்தனை ஆணையத்துக்கும் (செபி), கனடாவின் மானிடோபா பங்குகள் ஆணையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்கு பத்திரங்கள் தொடா்பான நடைமுறைகளில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம் வழிகோலுகிறது. மேலும், கனடாவின் மானிடோபா மாகாணத்தில் அமைந்துள்ள நிறுவனங்கள், செபியில் வெளிநாட்டு சமபங்கு முதலீட்டாளராகப் பதிவு செய்ய விரும்புகின்றன. அதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
கழிவுநீா் மேலாண்மையில் ஜப்பானுடன் ஒப்பந்தம்: கழிவுநீா் சுத்திகரிப்புக்கு அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஜப்பானுடன் இந்தியா இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்துக்கும் ஜப்பானின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளைப் பயன்படுத்த ஒப்புதல்: நிலக்கரிச் சுரங்கப் பகுதிச் சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கொள்கை வகுப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கொள்கை, சுரங்கம் தோண்டப்படாத நிலத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், நிலக்கரி மற்றும் எரிசக்தித் திட்டங்கள் தொடா்பான கட்டமைப்புகளை உருவாக்கவும் வகை செய்யும். நிலக்கரிச் சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளை வில்லங்கங்களிலிருந்து விடுவிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.